Published : 02 Mar 2016 08:22 AM
Last Updated : 02 Mar 2016 08:22 AM

அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் கிடைப்பதில் குழப்பம்

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் அரசு உறுதியான ஆணை பிறப்பிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 10 முதல் 19-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசின் பெரும்பாலான அலுவலகங்களில் 10 நாட்களில் பணிகள் முழுவதுமாக முடங்கின. தமிழக முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளாலும், தேர்தல் மற்றும் தேர்வுப் பணிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் வேலைநிறுத்தத் தைத் தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. இதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும் பினர்.

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்த நாட்களுக்குரிய சம்பளம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியலில், போராட்ட நாட்கள் பணிபுரிந்த நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர்களுக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சத்துணவு, அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட சில துறைகளில் சம்பளம் பிடித்தம் செய்ய துறைச் செயலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

வேலைநிறுத்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘வேலைநிறுத்த நாட்களுக்கு, 'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், சம்பளம் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்’ என்று தெரிவித்தார். ஆனால், தற்போது வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மேலும், இப்பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு உரிய உத்தரவினை வெளியிட வேண்டும் எனவும் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, வேலை நிறுத்த காலத்துக்கும் சம்பளம் வழங்க அரசு உத்தரவிடுமானால், அது நீதிமன்ற அவமதிப்பாக மாற வாய்ப்புள்ளது. மேலும், கருணை அடிப்படையில் சம்பளத்தை வழங்க உத்தரவிட்டால் பொது மக்களின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டுமென அரசு தயங்குகிறது. இதனால், அரசு இந்த விஷயத்தில் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்காமல் அமைதி காத்து வருகிறது.

சம்பளம் எவ்வளவு?

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. வேலை நிறுத்த காலத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வரை பங்கேற்ற நிலையில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.70 கோடி எனக் கணக்கிட்டாலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு ரூ.700 கோடி வரையில் சம்பளமாக வழங்க வேண்டி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x