Published : 05 Oct 2021 03:12 AM
Last Updated : 05 Oct 2021 03:12 AM
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவுசெய்து, முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் நேர்காணல் நடத்தப்படும். சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், மக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
சிலர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தை தவறாகப் பூர்த்தி செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட் வழங்க முடிவதில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு உரிய தகவல் கிடைக்காததால், தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக, வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம், அவர்களது குறைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளோம்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை இந்த வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் விண்ணப்பதாரர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுகிறது. நானே நேரடியாக பங்கேற்று, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய தீர்வு பெற்றுத்தர உள்ளேன்.
எனவே, விண்ணப்பதாரர்கள் 7305330666 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வீடியோ கால் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மக்களின் வரவேற்பைப் பொறுத்து, குறைதீர் நேரத்தை நீட்டிக்கவும், வாரத்துக்கு இரண்டு நாட்கள் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.
ஏற்கெனவே உள்ள ட்விட்டர், ஸ்கைப், தொலைபேசி, இ-மெயில் சேவைகள் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் எங்களைத் தொடர்புகொண்டு, தங்களது குறைகளுக்கு தீர்வுகாணலாம்.
இவ்வாறு கோவேந்தன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT