Published : 23 Mar 2016 07:45 PM
Last Updated : 23 Mar 2016 07:45 PM
கொடைக்கானல் அரசு மருத்துவமனை பிரதான வாயிலை பகலிலேயே பூட்டி வைத்திருந்ததால், விஷம் குடித்த இளைஞரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தபோது, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் அவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
கொடைக்கானல் மலைகிராமம் போளூரைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ் (27). கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இவர் விஷம் குடித்துள்ளார். மறுநாள் காலையில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் சந்தை நடைபெறுவதால், மருத்துவமனை சாலையில் நெரிசலாக இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் சிரமப்பட்டு மருத்துவமனை வாயிலை அடைந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் சைரன் ஒலியை எழுப்பியும் திறந்துவிட யாரும் வரவில்லை. இதையடுத்து, உறவினர்கள் உள்ளே சென்று ஊழியர்களிடம் முறையிட்டபின், வாயில் சாவியை ஊழியர்கள் தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து வாயில் கதவை திறப்பதற்குள் 20 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பால்ராஜ் இறந்தார்.
மருத்துவமனை வாயிலை பூட்டி வைத்ததால்தான் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர் இறந்ததாக உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாலாஜியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சந்தை மருத்துவமனை சாலையில்தான் நடைபெறும். அன்று மருத்துவமனைக்கு வருபவர்கள் நடந்து வரக்கூட சிரமப்படுவர். மருத்துவமனை வாயிலை மறைத்து வியாபாரிகள் கடைகளை அமைக்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர். இவற்றை தவிர்க்க, அன்று ஒருநாள் மட்டும் நடந்து வருபவர்களுக்கு வழிவிட்டு மருத்துவமனை வாயிலைப் பூட்டுவது வழக்கம்.
கடந்த ஞாயிறன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்த சிறிது நேரத்திலேயே கதவு திறக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கி 10 நிமிடத்தில் அவர் இறந்தார். விஷம் மிகுந்த மருந்தை குடித்ததால்தான் அவர் இறந்தார். மருத்துவமனை வாயிலில் ஏற்பட்ட தாமதம் காரணமல்ல என்றார்.
திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிக்கலா கூறியதாவது: கொடைக்கானல் அரசு மருத்துவமனை அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT