Published : 04 Oct 2021 07:54 PM
Last Updated : 04 Oct 2021 07:54 PM
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பெருமையும், பாரம்பரியமும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடக்கும். குறிப்பாக மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இந்தப் போட்டிகளைத் தடை செய்தபோது மாணவர்கள், பொதுமக்கள் கன்னியாகுமரி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தடைகள் நீக்கப்பட்டு, தற்போது தடையில்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டியின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறையினர் அறியும் வகையில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற வைக்க வேண்டும் என்றும், மதுரை தமுக்கம் மைதானத்தில் நினைவுக் கல்தூண் அமைக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்துத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய மாநிலத் தலைவர் முடக்காத்தான் மணி பேசுகையில், ‘‘வரும் ஆண்டுகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது மாடுபிடி வீரர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் அரசு காப்பீடு வசதி செய்ததர வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் பெருமைகள் மற்றும் பாரம்பரியம் குறித்துப் பள்ளிப் புத்தகங்களில் பாடம் இடம்பெற வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT