Published : 04 Oct 2021 01:01 PM
Last Updated : 04 Oct 2021 01:01 PM
கடலூரில் 14 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், கடலூர் போக்சோ நீதிமன்றம் முன்மாதிரியானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஸ்ரீபிரியா இன்று (அக். 04) வெளியிட்ட அறிக்கை:
"கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, கடந்த 12-2-2019 அன்று இரண்டு சமூக விரோதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குணசேகரன் என்கிற திலகர் (வயது 34), கட்டமணியார் என்கிற ஜெய்சங்கர் (49) ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்கள் மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதாவது, இருவரும் ஆயுள் காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்று சொல்லும் இத்தீர்ப்பு, முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதன் வாயிலாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தீர்ப்பின் வழி அந்தச் சிறுமிக்குக் கிடைக்கும் பத்து லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில் இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இனிவரும் காலங்களில் குற்றங்கள், தண்டனைகளற்ற லட்சியச் சமூகம் நோக்கி நாம் மானசீகமாகப் பயணிப்போம். ஒருநாள் நிச்சயம் கண்டடைவோம்".
இவ்வாறு ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT