Published : 04 Oct 2021 11:27 AM
Last Updated : 04 Oct 2021 11:27 AM

குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை ; கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதம்: மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

குஜராத் மாநிலத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்துக்கே விரோதமானது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 04) வெளியிட்ட அறிக்கை:

"நிதி ஒதுக்குவதிலிருந்து கரோனா தடுப்பு நடவடிக்கை வரை, குஜராத்துக்கு அள்ளிக் கொடுப்பதையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதையும் மத்தியில் ஆளும் மோடி அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, தான் சார்ந்த குஜராத்துக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதற்குச் சமம்.

மோடி அரசின் இத்தகைய செயலை குஜராத் சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்) அறிக்கையில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ஒதுக்கிய நிதி 350 சதவீதம் அதிகம் என, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்துக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கிய தொகை, குஜராத் அரசின் வருடாந்திர நிதி கணக்கில் காட்டப்படவில்லை.

'மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களுக்கான கூடுதல் உதவியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்' என்று 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு எடுத்த முடிவுக்கு இது முரணாக இருக்கிறது என்பதை சிஏஜி சுட்டிக்காட்டியிருக்கிறது.

2019-20 ஆம் ஆண்டு வரை குஜராத்தில் திட்டங்களை செயல்படுத்தும் ஏஜென்ஸிகளுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி அனுப்பியுள்ளது. அந்த வகையில் 2015-16 ஆம் ஆண்டு ரூ.2,542 கோடியாக இருந்த நிதியின் அளவு, 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 11 ஆயிரத்து 659 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 350 சதவீதம் அதிகமாக குஜராத்துக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசே நேரடியாக ரூ. 837 கோடி வரை வழங்கியிருக்கிறது. அதே காலக்கட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ.17 கோடியும், அறக்கட்டளைகள் ரூ.79 கோடியும் மத்திய அரசிடமிருந்து நேரடியாகப் பெற்றுள்ளன.

இதுதவிர, பதிவுசெய்யப்பட்ட சொஸைட்டிகள், என்ஜிஓக்கள் ரூ.18.35 கோடியும், சில தனிப்பட்ட நபர்களுக்கு ரூ.1.56 கோடியும் நிதி அளிக்கப்பட்டுள்ளதையும் சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. குஜராத்தில் திட்டங்களை செயல்படுத்தும் தனியார் ஏஜென்ஸிகள் மத்திய அரசிடம் இருந்து கடந்த 2019-20 இல் பெரும் தொகையை நேரடியாகப் பெற்றுள்ளன.

ஒரு சில நெருங்கிய தொழிலதிபர்களுக்கு மோடி அரசு சாதகமாக செயல்படுகிறது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இது உள்ளது.

குஜராத் பட்ஜெட் கையேடு 1983-ன் படி, எந்தவொரு செலவினமும் பட்ஜெட் ஒதுக்கீடு இன்றி அல்லது துணை மானியம் அல்லது ஒதுக்கீட்டின் எதிர்பார்ப்பு இன்றி செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு இன்றி செலவு செய்வது நிதி விதிமுறைகளை மீறுவதோடு, சட்டப்பேரவையின் விருப்பத்தையும் மீறிய நிதி ஒழுக்கமின்மையை வெளிப்படுத்துகிறது என்று பொட்டில் அடித்தாற்போல் சிஏஜி கூறியிருக்கிறது.

மேலும், குஜராத் அரசின் நிதி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளும் இந்திய தலைமை தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தேவைகளின் நம்பகமான அனுமானங்களின் அடிப்படையில் எதார்த்தமான வரவு - செலவு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு சிஏஜி பரிந்துரைத்துள்ளது.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகச் செயல்படுவதையே, 'பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முன்மாதிரி' என்று மோடி அரசால் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

குஜராத்தைச் சேர்ந்த ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் என்ற நிறுவனம் கரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை விநியோகித்தது. இதற்கு சுகாதார அமைச்சக சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையைப் பெறவில்லை.

ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் பாஜகவினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு விலையுயர்ந்த உடையை வழங்கி சர்ச்சைக்குள்ளானவர்கள் இந்த நிறுவனத்தின் குடும்பத்தினர் என்பதை சில ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவர். ஆனால், குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் செயல்பட்டு, அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு நிதியை நேரடியாக வழங்குவது, பதவிப்பிரமாணத்தின் போது அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாகும்.

கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அதற்காகத்தான் திட்டக்குழுவை நேரு உருவாக்கினார். தேசிய வளர்ச்சிக் குழு, தேசிய ஒருங்கிணைப்புக் குழு போன்றவற்றை ஏற்படுத்தி, மாநில அரசுகளுடன் சமமான நிதி பங்கீடு அளிப்பதற்கு சில அணுகுமுறை எல்லாம் கையாளப்பட்டது.

இவற்றை எல்லாம் மாற்றி அமைத்து திட்டக்குழுவை ஒழித்து, தேசிய வளர்ச்சிக் குழுவை செயல்படாமல் மோடி அரசு முடக்கியது. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்கள் சார்ந்த குஜராத் மாநிலத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்துக்கே விரோதமானது. கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயலையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசு, அதற்கான விலையைக் கொடுத்தே தீரவேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x