Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM
தமிழகத்தில் அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி விடுவோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து குமுளியிலும், தேவதானப்பட்டியிலும் நடந்த முகாம்களை அமைச்சர் ஆய்வு செய்தார். முன்னதாக குமுளி எல்லையில் கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரை சுகாதாரத் துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்வதை அவர் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய அலுவலகம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து உப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம், உபயோகித்த எண்ணெய் மறுபயன்பாட்டுத் திட்டம் ஆகிய 3 திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் மட்டும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த 1.04 கோடியை விட 38 லட்சம் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மத்திய அரசு 1.23 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது. அதையும் அடைந்துவிடுவோம்.
3-வது அலை வரக் கூடாது. அப்படியே வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால், எந்த அலை வந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி விடுவோம் என்றார்.
அப்போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT