Published : 03 Oct 2021 04:00 PM
Last Updated : 03 Oct 2021 04:00 PM
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் வக்காலத்து வாங்குகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (அக்.3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி வருவதால் தேவையான அளவுக்கு அரசுப் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை தேவையற்றது. சாதாரண விவசாயிக்கு இது சாத்தியமற்றது. இதை அரசு மறுபரிசீலனை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ளதைப் போன்ற கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்க்க முடியாது. எனினும், ஓரளவுக்குக் கட்டுப்பாடோடு உள்ளது.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் தேவையான மின்விளக்குகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகமே வாங்கிக்கொள்ளும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். அதிமுக அரசு கொண்டுவந்த மாநில அளவிலான ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கென தனித்தனிச் சட்டத்தை செயல்படுத்துவதைக் கைவிட்டு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கென நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தால் விவசாயப் பணி பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் அவதூறாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவரது பேச்சானது இத்திட்டத்தை முடக்க வேண்டுமென நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் உள்ளது.
மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும்போது கண்டுகொள்ளாத சீமான், தற்போது இந்தியா முழுவதும் 14 கோடி கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டமாக உள்ள இத்திட்டத்தைக் குறைகூறுகிறார். கடந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் பேசியதைத் தற்போது சீமான் பேசி வருகிறார். இத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்துவதற்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது’’.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT