Published : 03 Oct 2021 02:39 PM
Last Updated : 03 Oct 2021 02:39 PM
தமிழகத்தில் அதிமுக அடிமையாக இருந்ததுபோல, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுக்கு அடிமையாக உள்ளது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களுள் ஒருவரான கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று (அக்.3), காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை நகராட்சி முதல் கிராமப் பஞ்சாயத்து வரை அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் மற்றும் இங்குள்ள தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் இன்றும் முதன்மையான கட்சி. தோல்வியடைந்த தேர்தலில் கூட 29 சதவீத வாக்கு பெற்றுள்ளது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மக்களுக்காகப் பணியாற்றி வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்று வந்தாலும் கூட, தமிழகத்தில் அதிமுக அரசு எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, தற்போது கட்சியே கரையும் நிலைமையில் உள்ளதோ, அதேபோல துரதிர்ஷ்டவசமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுக்கு அடிமையாக உள்ளது. குறிப்பாக மாநிலங்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸை மிரட்டியோ அல்லது வற்புறுத்தியோதான் பாஜக அந்த இடத்தைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி மக்களுக்கு விரோதமான அரசு ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என மக்கள் உணர்ந்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச மருத்துவம் பார்க்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு அநீதிகளை புதுச்சேரி, தமிழக மக்கள் மீது பாஜக நிகழ்த்தி வருகிறது. இதற்கெல்லாம் புதுச்சேரி மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் விடை அளிப்பார்கள். காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது''.
இவ்வாறு எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT