Published : 03 Oct 2021 01:08 PM
Last Updated : 03 Oct 2021 01:08 PM
கூடலூரில் 9 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த ஆட்கொல்லிப் புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது. உயிருடன் பிடிக்கவே முயற்சி செய்கிறோம் என்று தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்கா, தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, வனத்துறையினர் புலியைப் பிடித்துச் செல்ல முடிவு செய்து தனிப்படை அமைத்துக் கண்காணிக்கத் தொடங்கினர்.
இரண்டு நாட்கள் அதே பகுதியில் முகாமிட்டிருந்த புலி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேஃபீல்ட் எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு மாட்டைத் தாக்கிக் கொன்றது. இதையடுத்து, ஒட்டுமொத்த வனத்துறையும் மேஃபீல்ட் எஸ்டேட் பகுதிக்குச் சென்றது.
புலியைப் பிடிக்கும் பணியில் பின்னடைவு
மேஃபீல்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கற்பூரச் சோலையில் பதுங்கி, தேயிலைத் தோட்டங்களில் புலி சுற்றித் திரிந்தது. இதை வனத்துறையின் கண்காணிப்புக் குழுவினர் இரண்டு முறை பார்த்துள்ளனர். புலி வேகமாக ஓடி புதரில் மறைந்துவிட்டதால், மயக்க மருந்து செலுத்த அவகாசம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அந்தப் புலி மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதிக்குள் நடமாடுவதைக் கண்டறிந்த கண்காணிப்புக் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, புலி ஏற்கெனவே இருந்த புதர் பகுதியில் இருந்து அருகில் உள்ள சதுப்பு நிலப் புதருக்குள் ஓடி மறைந்தது. இதனால், புலியைப் பிடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கும்கி யானை வரவழைப்பு
புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் வனத்துறையினருடன், கேரள அதிவிரைவுக் குழு மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்பட்டது.
புலிக்கு மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் செல்வதற்கு வசதியாக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 1) காலை டி.23 என்ற அடையாளம் காணப்பட்ட ஆட்கொல்லிப் புலி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தென்பட்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரைத் தாக்க முயன்றது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக வெளியில் யாரும் நடமாட வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர். இந்நிலையில், கல்குவாரி என்ற இடத்தில் மசினகுடி அருகேயுள்ள குறும்பர்பாடியைச் சேர்ந்த பசுவன் (65) என்ற பழங்குடியின முதியவரை அடித்து வனத்துக்குள் இழுத்துச் சென்றது.
வனத்துறை அமைச்சர் உத்தரவு
தேவன் எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் தற்போது சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லிப் புலியைத் தேடி வருகின்றனர். புலியைப் பிடிக்கும் பணியில் 75 பேர் ஈடுபட்டு வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முழு வீச்சில் வனத்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரியில் முகாமிட்டுப் புலியைப் பிடிக்கும் பணியைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டதை அடுத்து வனத்துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.
நான்கு பேர் பலி
சந்திரனைக் கொன்ற புலி டி.23 என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதுமலை வனப் பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. ஆகஸ்ட் மாதம் பொக்கபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை அதே புலி தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த மாதம் 24-ம் தேதி தேவன் எஸ்டேட் பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்த சந்திரன் என்ற தொழிலாளியைப் புலி தாக்கிக் கொன்றது. இந்நிலையில், இன்று (அக். 01) பசுவன் என்ற முதியவரைக் கொன்றுள்ளது. ஆட்கொல்லிப் புலியின் வேட்டை தொடர்ந்து வருவதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
9-வது நாளாகத் தேடும் பணி
கூடலூரில் வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருக்கும் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கும் பணி 9-வது நாளாகத் தொடர்கிறது. புலி பதுங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதி சமதளப் பகுதி என்பதால் கும்கி யானை உதவியுடன் வனக் கால்நடை மருத்துவர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.
புலி சுட்டுக் கொல்லப்படாது: சேகர்குமார் நீரஜ்
இந்நிலையில் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் மசினகுடி பகுதியில் ஆலோசனை மேற்கொண்டார்.
''புலியைச் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. எக்காரணம் கொண்டும் புலி சுட்டுக் கொல்லப்படாது. புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சி மட்டுமே நடந்து வருகிறது. புலி பதுங்கியிருந்தாலும் அதன் குணாதிசயங்களைக் கண்டறிவதில் சிக்கல் இருப்பதால் புலியைப் பிடிக்க முடியவில்லை'' என்று சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT