Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 200 குளங்களை சீரமைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்’’ என்று அறிவித்தார். தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்5 கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள், கலிங்கல் ஆகியவை பழுதுபார்க்கப்படும். தேவைப்பட்டால் வரத்துக் கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்படும். மொத்தத்தில் குளங்களை பழுதுபார்த்து, சீரமைத்து, மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் முதல்கட்டமாக 48 குளங்களும், 2-ம் கட்டமாக 56 குளங்களும் ரூ.25 கோடியில் சீரமைத்து மேம்படுத்தப்பட்டன. 3-ம் கட்டமாக 49 குளங்கள் ரூ.22 கோடியில் மேம்படுத்தப்பட்டன. 4-வது கட்டமாக தற்போது 83 குளங்கள் ரூ.49 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மண்டல வாரியாக சென்னையில் 94, திருச்சியில் 59, மதுரையில் 47 குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன. இந்த முறை கோவை மண்டலத்தில் இருந்து குளங்கள் எதுவும் சீரமைப்புபணிக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
குளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அந்தந்த ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் அடிப்படையிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படியும் குளங்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கும்.
இதையடுத்து நவம்பர், டிசம்பரில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஜனவரியில் குளங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.
இந்த பணிகளை 2022 ஏப்ரலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின்போது குளத்தின் முழு கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT