Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM
மதுரை பாப்பாபட்டியில் நேற்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் வழியில் வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி குறைகளைக் கேட்டறிந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், திமுகவினர் அளித்த வரவேற்புக்குப் பிறகு கிராமசபைக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு யாரும் வர வேண்டாம் எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.
துறை அமைச்சர் என்ற முறையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வரின் தனிச் செயலர் உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் மட்டும் முதல்வருடன் சென்றனர்.
சில வாரங்களாக பாப்பாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததைப் பயன்படுத்தி, அப்பகுதிகளில் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதனால் முதல்வர் வரும் வழிஎங்கும் பசுமையாக காணப்பட்டதுடன், வயல்வெளிகளில் பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாட்டார்பட்டி அருகே வந்தபோது வயல்வெளிகளில் வேலைபார்த்த பெண்களைப் பார்த்தவுடன், காரை விட்டு இறங்கிய முதல்வர் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களிடம் முதல்வர், ‘என்னை உங்களுக்குத் தெரியுமா? ’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், ‘என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க. நீங்கதானே எங்களோட முதல்வர்’ என்றனர். ‘சந்தோஷம்’ என்ற முதல்வர், தொடர்ந்து அவர்களிடம் ‘ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா’ என்று கேட்டார்.
அதற்கு அப்பெண்கள், ‘ஆமாம் சார். எங்களுக்கு வீடே இல்ல சார். மாடுகளை வைத்து பிழைக்கிறோம். இன்றைக்கு வரை மாட்டுத் தொழுவம்தான் எங்களுக்கு வீடு. மழை, வெயிலில் கஷ்டப்படுகிறோம். எந்த வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரல. சொன்னோம்னா இந்தாப் பார்க்கிறேன், அந்தாப் பார்க்கிறேன்னு தட்டிக் கழிக்கிறாங்க. கொசுக்கடியில் கிடக்கிறோம். எங்களுக்கு சொத்து, சுகம் ஒன்னும் வேணாம். நிம்மதியாக பிள்ளைக் குட்டிகளோடு தூங்க ஒரு இடம் இருந்தாப்போதும். கஞ்சி குடிச்சாவது பிழைச்சுக்குவோம்’ என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு ‘உங்க பஞ்சாயத்து தலைவர் யார்’ என முதல்வர் கேட்க ‘திருப்பதி’ என்றனர். ‘உங்கள் கோரிக்கைகளை உடனே பார்க்கச் சொல்றேன்’ என்று கூறி விடைபெற்ற முதல்வர், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, அந்தப் பெண்களின் கோரிக்கைகளை குறிப்பெடுக்க அறிவுறுத்தினார். முதல்வரைப் பார்த்து பேசிய மகிழ்ச்சியில் அப்பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT