Published : 02 Oct 2021 06:17 PM
Last Updated : 02 Oct 2021 06:17 PM

ஊழல் தனது வேர்களைப் பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்கச் செய்துவிட்டது: சென்னை உயர் நீதிமன்றம்

ஊழல் தனது வேர்களைப் பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்கச் செய்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செய்கை செய்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x