Published : 02 Oct 2021 05:18 PM
Last Updated : 02 Oct 2021 05:18 PM

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: பயிர் கடனுக்கான காசோலைகளை வழங்கினார்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

மதுரை

மதுரை கே. நாட்டாபட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பயிர் கடனுக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 02) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, இக்கிராமசபைக் கூட்டத்தையொட்டி பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வரின் முன்னிலையில் பாப்பாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், முதல்வர் அக்கிராம மக்களிடம் கலந்துரையாடினார்.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கே. நாட்டாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்பு, பயனாளிகளுக்கு பயிர் கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.

வறுமையில் வாடித்தவிக்கும் பாமரமக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில், காந்தி 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் நாள் மதுரை மாநகர், மேலமாசி வீதியில் முழுந்தாள் வரை ஆடை உடுத்தும் விரதத்தை மேற்கொண்ட இடத்தில் அமைந்துள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், கிராமப்புறங்களில் கதர் மற்றும் கிராமத் தொழில்களை அமைத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

காந்தியின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் வகையில், கதர் துணிகளை கண்காட்சி மூலம் 2.10.2021 முதல் 4.11.2021 வரை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கதர் பருத்தி, பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர், மதுரை - கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள கதர் அங்காடியின் முதல் விற்பனையை இன்று தொடங்கி வைத்தார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x