Published : 02 Oct 2021 04:18 PM
Last Updated : 02 Oct 2021 04:18 PM
தமிழகம்தான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி இன்று (அக். 02) மதுரை மாவட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
"இந்த நாட்டையே கிராம ராஜ்யம் ஆக்க வேண்டும் என்று விரும்பியவர் காந்தி. கிராமம் தான் இந்தியா, உண்மையான இந்தியா என்றால் அது கிராமத்திலிருந்துதான் உருவாகிறது - இதைச் சொன்னவர் காந்தி. அத்தகைய கிராமப் பகுதிக்கு நான் இன்றைக்கு வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மதுரை மண் காந்திக்கு மறக்கமுடியாத மண் ஆகும்.
மதுரைக்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு குக்கிராமத்துக்கு காந்தி வந்திருந்தபோது, ஏழைகள் மாற்றுத் துணி இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், நாம் எதற்காக இதுபோன்ற ஆடம்பர உடையை அணிய வேண்டும் என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு அன்றைக்கே கோட்டை கழட்டி போட்டுவிட்டார்.
அதிலிருந்து அரையாடையோடு தான் காந்தி வாழ்ந்தார் என்பது வரலாறு. 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. காந்தி அடிகளையே மாற்றிய பகுதிதான் இந்த மதுரை பகுதி என்பது பெருமைக்குரியது.
இன்றைக்கு கிராமசபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. நான் முதல்வராகி எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன், பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன், எல்லா நிகழ்ச்சிகளையும்விட மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவென்று கேட்டால், இந்த பாப்பாபட்டி பகுதியில் நடக்கிற இந்த நிகழ்ச்சியாகத்தான் அமையும்.
2006-ம் ஆண்டு இந்தப் பகுதியில் ஊராட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை இருந்து. 2006-ம் ஆண்டு நடைபெற்ற அந்த வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் இங்கே சுட்டிக் காட்டினீர்கள். மதுரை மாவட்டத்தில் சில கிராமப்பகுதிகளில் தேர்தல் நடத்த முடியாத ஒரு சமூகச் சூழல் இருந்தது.
அதில் குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு கிராமங்களில் தேர்தலே நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது, யாரால் ஏற்பட்டது என்கிற விவகாரத்தில் நான் செல்ல விரும்பவில்லை, அது தேவையில்லை.
ஆனால், ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால், தேர்தல் நடத்தியாக வேண்டும். மிகமிக அடிப்படையானது என்பதால் இந்தத் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் என்று அன்றைக்கு கருணாநிதி முதல்வராக இருந்தார், அவருடைய அமைச்சரவையில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது என்னுடைய துறையில் உள்ளாட்சித் துறைச் செயலாளராக இருந்தவர்தான் அசோக் வரதன் ஷெட்டி. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் இப்போது என்னுடைய முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் உதயச்சந்திரன். அசோக் வரதன் ஷெட்டியும், உதயச்சந்திரனும் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இந்தத் தேர்தலை எப்படியாவது நடத்தவேண்டும் என்று முயற்சி செய்து, அதற்காக பல சிரமங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு, அதற்கு நீங்களும் பல வகையில் ஒத்துழைப்பு தந்து, தேர்தலை நடத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, தேர்தலை நடத்திக் கொடுத்தீர்கள்.
இந்த ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஊராட்சித் தலைவர்களுக்காக பாராட்டு விழாவே நடத்தினோம். கருணாநிதி அந்த விழாவில் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினார். அந்த விழாவுக்கு சமத்துவப் பெருவிழா என்றும் பெயர் சூட்டி அந்த விழாவை நடத்தினோம். அந்த விழாவுக்கு நான் தான் முன்னிலை வகித்தேன். அதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு பேசும்போது சொன்னார், தலைவர் கருணாநிதிக்கு 'சமத்துவப் பெரியார் கலைஞர்' என்று பட்டத்தைக் கொடுத்தார்.
சமத்துவப் பெருவிழாவில் பேசும் போது சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை என்று பேசினார் கருணாநிதி. ஒற்றுமை இல்லாத சமூகத்தில் வளர்ச்சி இருக்காது. அத்தகைய ஒற்றுமை உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டம் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. கிராமங்களில் இருந்து தான் ஜனநாயகம் மலர்ந்தது.
கடைக்கோடி மனிதனின் குரலைக் கேட்பதற்காகத் தான் நான் வந்திருக்கிறேன். இதுதான் காந்தி காண விரும்பிய கிராம ராஜ்ஜியம்.
இது எனது அரசு அல்ல; நமது அரசு. உங்களுடைய விருப்பங்களோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவிருக்கக்கூடிய அரசு.
ஏழை - பணக்காரர், கிராமம் - நகரம், பெரிய தொழில் - சிறிய தொழில், வட மாவட்டம் - தென்மாவட்டம் என்ற எந்த வேற்றுமையும் நாங்கள் பார்க்கப் போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகத்தை அமைப்பதற்கு நாங்கள் பாடுபடப் போகிறோம், அதற்கு நீங்கள் அத்தனைபேரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளையும் வெளியிடப்போகிறேன்.
அறிவிப்புகள்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பாப்பாபட்டி கிராமத்தில் ரூபாய் 23 லட்சத்து 57 ஆயிரம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும்.
* பாகதேவன்பட்டி கிராமத்தில் சுமார் 10 இலட்சத்து 93 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடம் உருவாக்கப்படும்.
* பாப்பாபட்டி கிராமத்தில் ரூபாய் 14 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டித் தரப்படும்.
* பாப்பாபட்டி, மகாதேவன்பட்டி, பேயம்பட்டி மற்றும் கரையாம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மயானங்களில் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* கரையாம்பட்டி கிராமத்தில் ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கப்படும் களம் அமைக்கப்படும்.
* கல்லுப்பட்டி காலனியில் புதிய தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பாகதேவன்பட்டி, பேயம்பட்டி ஆகிய கிராமங்கள் கூடுதல் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும், இவை ரூபாய் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் செலவில் நிறைவேற்றப்படும்.
* பாப்பாபட்டி கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். மேலும், பாப்பாபட்டி மற்றும் கல்லுப்பட்டி காலனிக்கு புதிய ஆழ்குழாய் அமைக்கப்படும். இதற்கான மதிப்பீடு ரூபாய் 25 லட்சத்து ஆறாயிரம் ஆகும்.
கடந்த சில நாட்களாக, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களையெல்லாம் ஒப்பிட்டு, ஒரு சிறந்த முதல்வர், நம்பர் 1 முதல்வர் என்று எனக்கு பெயர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ளபடியே எனக்கு பெருமை இல்லை. எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தமிழகம்தான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும், வரப்போகிறது, வரும். அதற்கு நீங்களெல்லாம் துணை நிற்க வேண்டும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT