Published : 02 Oct 2021 02:52 PM
Last Updated : 02 Oct 2021 02:52 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் அனைவரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, இன்று (அக். 02) சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் 20 பேருக்கு ஊதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், டி.எம்.எஸ். வளாகத்தில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 2021-2022 ஆண்டுக்கான தர வரிசைப்பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"முதல்வரின் உத்தரவுப்படி, தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற 28,100 பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தம் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் இந்த அரசு பெருமைகொள்கிறது.
முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் இதுவரை 14 லட்சத்து 20 ஆயிரத்து 957 பேருக்கு மருத்துவம் பார்த்தும், மருந்து மாத்திரைகளை வழங்கியும், மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிற மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு மகிழ்ச்சியோடும், நன்றியோடும் பாராட்டுகிறது.
மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்குவதனால், ஆண்டொன்றுக்கு 89 கோடி ரூபாய் கூடுதல் செலவினமாகும். சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவர்கள் 26 ஆயிரம் ரூபாயிலிருந்து 34 ஆயிரமாகவும், பல் மருத்துவர்களுக்கு 26 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரமாகவும், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்களுக்கு 16 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 21 ஆயிரமாகவும், தாய்சேய் நல அலுவலர்களுக்கு 15 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரமாகவும், செவிலியர்களுக்கு 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாகவும், மருந்தாளுநர்களுக்கு 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாகவும், பெண் துணை செவிலியர்களுக்கு 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாகவும், இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு 10 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாகவும், ஆய்வுக்கூட நுட்புனர்களுக்கு 10 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாகவும், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 8 ஆயிரத்து 500 ரூபாயாகவும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கிய முதல்வருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழகத்தில் தற்போது நிதி நெருக்கடியை முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகளினால் மேற்கொண்டுவருவதை நீங்கள் அறிவீர்கள். தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நீங்கள், கடந்த நான்கரை மாதங்களாக ஊதிய உயர்வுக்கோரி எந்தவொரு விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை. பொறுமைக் காத்து இருந்தீர்கள். பொறுமையாக இருந்ததற்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விரும்பத்தகாத நிகழ்வு டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கோரி எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இரண்டு, மூன்று மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் சிலரின் தூண்டுதலின்பேரில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு பேர் என்னைச் சந்தித்து நான்கு மாதங்களாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
இப்படி பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தோம்.
நான் எனது அரசியல் வாழ்க்கையை ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்துதான் தொடங்கினேன். இதை நான் சட்டப்பேரவையிலேயே பதிவு செய்திருக்கிறேன். 1980 ஆம் ஆண்டு 500 பெண்களுக்காக தலைமைச் செயலகத்தின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டேன்.
அப்போது, எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் என்னை பேசுவதற்கு அலுவலகத்துக்கு அழைத்ததாக அலுவலர்கள் மூலம் செய்தி வந்தது. நான் போக மறுத்து, முதல்வரை கீழே வரவழைத்து, எங்களது கோரிக்கையை அப்போது விளக்கினோம்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், தங்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடுவதில்லை தவறொன்றுமில்லை. ஆனால், இந்தப் போராட்டம் நடத்தினால் கோரிக்கைகள் வெற்றி பெறுமா? என்று தெளிவாக தெரிந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
மேலும் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 358. இதில், அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62, சுயநிதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296 ஆகும். இப்போது பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்கள் 1,018. இதில், தரவரிசைக்கு தகுதியான விண்ணப்பங்கள் 964. இப்பட்டியலின் அடிப்படையில் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை 3-10-2021 அன்று தொடங்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் செப்.12 அன்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து வந்த புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவர்கள் 6 கோடியே 6 லட்சம் பேர் இருக்கின்றனர். அப்படி 18 வயதைக் கடந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்கிற அடிப்படையில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சதவிகித அடிப்படையில் 68 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். அக்டோபர் மாதத்துக்குள் 70 சதவிகிதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்கிற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 70 சதவிகிதத்துக்கு மேல்தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. 2-வது தவணை செலுத்திக்கொள்பவர்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன்படி, 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 20 சதவிகிதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 2 அல்லது 3 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை உயரும்.
65 வயதைக் கடந்தவர்களும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது.
கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 28 நாட்கள் கழித்து யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு கோவாக்சின் 5 முதல் 6 லட்சம் அளவுக்குக் கையிருப்பில் உள்ளது. அவர்கள் முன்வந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
அதேபோல், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக்கொண்டு 84 நாட்கள் கழிந்த நிலையில் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வோரும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் சார்பில் 1 கோடியே 04 லட்சம் தடுப்பூசிகள் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. தமிழக அரசு மிகச் சிறப்பாக தடுப்பூசி செலுத்தியதால் 36 லட்சம் தடுப்பூசிகள் அளவுக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது. அக்டோபர் மாதத்துக்கு 1 கோடியே 23 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு 30 லட்சம் அளவுக்குக் கூடுதலாகப் பெற்று அக்டோபர் மாதத்துக்கு 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT