Published : 02 Oct 2021 11:54 AM
Last Updated : 02 Oct 2021 11:54 AM
கோவை மாவட்டத்தில் அரசு ரத்த வங்கிகள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் செயல்படுகின்றன. தவிர, 18 தனியார் ரத்த வங்கிகளும், 6 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன.
அறுவை சிகிச்சை மற்றும் விபத்துக் காலங்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு எவ்வித தடையும் இன்றி ரத்தம் கிடைக்க, தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிப்பதே சிறந்த வழியாகும். ஒவ்வொரு யூனிட் ரத்தம் 4 உயிர்களை சேமிக்க உதவுகிறது. ரத்தக்கூறுகளான ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்தத் தட்டுகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுகின்றன.
சேகரிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் ரத்தமும் பாதுகாப்பு கருதி ஹெச்.ஐ.வி, மஞ்சள் காமாலை, பால்வினை நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பரிமாற்றம் செய்யப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, "மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு 4 அரசு ரத்த வங்கிகளின் மூலம் 10,925 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில், 63 ரத்த தான முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 2,884 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளன.
ஆரோக்கியமாக உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதுமானதாகும். ரத்த தானம் செய்யும் குருதி கொடையாளரிடம் இருந்து சுமார் 300 மில்லி ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது.
ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் 4 உயிர்களை காப்பாற்றிட இயலும். எனவே, ரத்த தானம் செய்வதற்கு பொதுமக்களிம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தன்னார்வமாக ரத்த தானம் செய்வோருக்கு அரசு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி, 2020-21-ம் ஆண்டுக்கான தன்னார்வ ரத்த கொடையாளர்கள் 40 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (அக். 01) நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து தன்னார்வ ரத்த கொடையாளர்களான முன்னாள் எம்எல்ஏவும், திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் உள்ளிட்ட 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இதில், மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT