Published : 02 Oct 2021 11:21 AM
Last Updated : 02 Oct 2021 11:21 AM
வாழ்க்கையில் எல்லோரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, காந்தி பிறந்தநாளில் பாபநாசத்தில் ஆளில்லா கடை இன்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிறுத்தத்தில், காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை இன்று (அக். 02) திறக்கப்பட்டது.
இந்த கடையை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பி. பூரணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எஸ். பாலாஜி, துணை ஆளுநர் ஸ்டாலின், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பத்மநாதன், ஆறுமுகம், ராஜேந்திரன், ஜெய சேகர், சரவணன், செந்தில் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றில் அதன் விலை அச்சிடப்பட்டு அங்கிருந்தது. அதன் அருகே ஒரு 'பாக்ஸ்' வைக்கப்பட்டிருந்தது. பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை அந்த பாக்ஸில் பொதுமக்கள் செலுத்தினர். அதேபோல், பணத்தைப் போட்டுவிட்டு சரியான சில்லறையையும் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து, ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில், "காந்தி நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியா உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நனவாக்கிட பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாளில் நேர்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 22-வது ஆண்டாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது.
இந்த கடையி்ல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அந்தந்த பொருட்களில் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை பாக்ஸில் போட வேண்டும். இந்த கடையில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் உள்ளன. லாபம் நோக்கம் கிடையாது. நேர்மை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விற்பனையாகும் தொகை சேவை திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT