Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM
அதிமுக ஏற்கெனவே கொண்டு வந்த சட்ட மசோதாவைதான் ஸ்டாலின் புதுப்பித்துள்ளார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், அவர்கள் வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்கியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஈச்சங்காடு சந்திப்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
ஒரு மாநிலம் அனைத்து நிலையிலும் சிறந்து இருக்க, சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ வேண்டும். அந்த சூழல் தமிழகத்தில் இல்லை. பெண்கள் தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
திமுகவினரும், முதல்வர் ஸ்டாலினும் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றனர். அதற்கு சட்ட மசோதாவையும் நிறைவேற்றினர். ஆனால் அந்த சட்ட மசோதாவை ஏற்கெனவே அதிமுக நிறைவேற்றிவிட்டது. அதை இப்போது ஸ்டாலின் புதுப்பித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவக் கல்லூரியில் அதிமுக அரசு சார்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்தல் முழுக்க முழுக்க தொண்டர்களுக்கான தேர்தல். இதில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் காஞ்சிபுரத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இங்கு ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “இந்த தேர்தலில் நமது ஒற்றுமையை நாம்நிலை நாட்ட வேண்டும். தமிழகமக்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டர்கள் கூட முதல்வராக வர முடியும். அதிமுகவுக்கு எப்போதும் அழிவில்லை. வளர்ச்சி மட்டுமே இருக்கும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனுவாசன், காமராஜ், பெஞ்மின், மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...