Published : 01 Oct 2021 05:35 PM
Last Updated : 01 Oct 2021 05:35 PM
உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்தை மீறி நடத்த முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.
இதற்கு புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், முதல்கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய 7-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், அதில் தலையிடவில்லை எனத் தெரிவித்தனர். மேலும், உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது எனக் கருத்து தெரிவித்து வழக்கை வரும் திங்கள் கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT