Published : 01 Oct 2021 05:22 PM
Last Updated : 01 Oct 2021 05:22 PM

அக்டோபர் மாதத்தில் 1.5 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மார்பகப் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை

அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்காக வைத்துச் செயல்படுவோம் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இன்று (அக். 01) அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மார்பகப் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களிடம் அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்களே விரும்பி அதிகமான அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி மற்றும் அவர்களது விருப்பத்தின்படியும், தற்போது கையிருப்பில் 24 லட்சத்து 98 ஆயிரத்து 365 தடுப்பூசிகள் இருப்பதாலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (3-10-2021) அன்று தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் செலுத்த இருக்கின்றன.

ஏற்கெனவே நடைபெற்ற மூன்று மருத்துவ முகாம்களைப் போலவே இந்த நான்காவது மருத்துவ முகாம்களும் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற உள்ளன.

நான் கடந்த மூன்று முறையும் ஆய்வுக்குச் சென்றதைப் போலவே, இந்த வாரமும் தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் ஆய்வுக்குச் செல்ல இருக்கிறோம். சென்னையில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் மருத்துவத் துறையின் செயலாளர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

முதல்வர் கடந்த மூன்று முறை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களிலும் சென்னையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைப் பாராட்டியும், மருத்துவ அலுவலர்களை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜன.16 அன்று தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. அதிலிருந்து எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் அதிகமான அளவுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த மாதத்தில்தான் மூன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதல் தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகளும், 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் தடுப்பூசிகளும், மூன்றாவது முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதால், செப்டம்பர் மாதத்தில் எந்த மாதத்திலும் செலுத்தாத அளவில் 1 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் 1 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரம் தடுப்பூசிகள் என்று செப்டம்பர் மாதத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதால், கூடுதலாக மத்திய அரசின் சார்பில் 37 லட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வரின் வழிகாட்டுதலால், மத்திய அரசின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின்படி வாரத்துக்குத் தமிழகத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளும், மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசிகளும் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்துக்கு மத்திய அரசின் சார்பில் 1 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 370 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். இன்று மாலை 8 அல்லது 9 லட்சம் அளவுக்குத் தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிச்சயம் தடுப்பூசி செலுத்துவதில் பெரிய அளவிலான சதவிகிதத்தை எட்ட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு ஏற்படும். உலக சுகாதார நிறுவனத்தின் 70 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசி செலுத்தினால் கரோனா குறித்து பயப்படத் தேவையில்லை என்கிற அறிவிப்பின்படி, முதல்வர் அந்த இலக்கை அக்டோபர் மாதத்துக்குள்ளாவது எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவப் பணியாளர்களுக்குக் கூடுதலான பணிச்சுமை இருப்பதால்தான், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, அதற்கு மறுநாள் திங்கள்கிழமை விடுமுறை அளிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்று, அடுத்த நாள் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படவிருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற மூன்றாவது முகாமில் மிகப்பெரிய அளவுக்கு 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 28 நாட்கள் கழித்து யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு கோவாக்சின் 5 முதல் 6 லட்சம் அளவிற்குக் கையிருப்பில் உள்ளது.

அவர்கள் முன்வந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக்கொண்டு 84 நாட்கள் கழிந்த நிலையில், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வோரும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x