Published : 01 Oct 2021 04:01 PM
Last Updated : 01 Oct 2021 04:01 PM

நீதிபதியைப் பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறை: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

நீதிபதியைப் பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதற்காக, சாலைகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். இதனால், அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இதேபோன்று, அந்தச் சாலை வழியாக உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனால் உயர் நீதிமன்றத்துக்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால், தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து உள்துறைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி, காணொலிக் காட்சி மூலம் ஆஜாரான உள்துறைச் செயலாளர் பிரபாகரிடம், எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான, நீதிபதியான என்னைப் பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என, நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறைச் செயலாளர், சென்னை மாநகரக் காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.

இதையடுத்து, முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது, இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x