Published : 01 Oct 2021 02:18 PM
Last Updated : 01 Oct 2021 02:18 PM

தமிழகம் 100% இலக்கை எய்திட பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

ரத்த தானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திட பொதுமக்கள் தன்னார்வ ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 01) வெளியிட்ட அறிக்கை:

"மனித உயிரைக் காப்பாற்றும் உயரிய செயலான தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் 'உயிர் காக்கும் உதிர தானம்' என்பதாகும்.

தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில், விழிப்புணர்வைத் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அறிவியலில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும், ரத்தம் என்ற அதிசய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை.

ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின்போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்தபின் 24 மணி நேரத்துக்குள்ளாக நம் உடல் இழந்த ரத்தத்தை ஈடுசெய்துவிடுகிறது.

ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் பெண் இருபாலரும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால், இறைக்கின்ற கிணறு ஊறுவது போல் உடலில் புதிய செல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த வங்கிகள் மற்றும் ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம்.

ஆண்டுதோறும் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்களைத் தமிழக அரசின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய இந்தியா @ 75' என்ற தலைப்பில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் மற்றும் இணையதள விநாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தினை ரத்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாகச் சேமிக்க, ரூ.175 லட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அதிநவீன 5 நடமாடும் ரத்த சேமிப்பு ஊர்திகள் (BCTV) வழங்கப்பட உள்ளன.

அரிய வகை ரத்த சிவப்பணுக்களை 10 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.375 லட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு (Frozen Red Cell Storage Unit) அமைக்கப்பட உள்ளது.

மேலும், ரத்தப் பைகளைக் கண்காணிக்க ரூ.208 லட்சம் செலவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிரியக்க அலைவீச்சுக் கருவி (Radio Frequency Identification Device) பொருத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு அரசு, தனியார் ரத்த வங்கிகள் மூலம் 90 விழுக்காடு ரத்தம் சேகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிடவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x