Published : 01 Oct 2021 12:25 PM
Last Updated : 01 Oct 2021 12:25 PM
செவிலியர்களை அழைத்துப் பேசி, பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 01) வெளியிட்ட அறிக்கை:
"சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, சகிப்புத்தன்மையுடன், சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை அனைத்தையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஒருவகை தொண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
கரோனா கொடுந்தொற்று நோய் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது, கரோனா தடுப்புப் பணிகளை மேலும் வலுவடையச் செய்யும் விதமாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாத காலத்துக்கு நியமிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டார்கள்.
இவர்களது பணி போற்றத்தக்க வகையில் அமைந்ததாலும், இவர்களின் சேவை தேவை என்ற நிலை இருந்தாலும், ஆறு மாத காலப் பணி முடிந்த பின்னரும், அவர்களுடைய பணி தொடர்ந்து, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியினை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கரோனா நோயின் இரண்டாவது அலை முற்றிலும் அகலாத நிலையில், மூன்றாவது அலை வருவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்ற இந்தத் தருணத்தில், ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாகவும், இதன் காரணமாக, பணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளதாகவும், எனவே பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செவிலியர் பணியை விட்டுவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வந்துள்ள அவர்களை பணியிலிருந்து விடுவிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சோதனையான காலக்கட்டத்தில் தமிழக மக்களுக்கு சேவைபுரிந்த செவிலியர்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கரோனா நோய்த் தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நிலையில், தங்களின் உயிரைத் துச்சமென மதித்து ஆபத்தான காலங்களில் பணியாற்றிய அவர்களது சேவையையும், அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குவது மக்கள் நலன் பயக்கும் செயல் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்துப் பேசி, பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT