Published : 30 Sep 2021 06:08 PM
Last Updated : 30 Sep 2021 06:08 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நவீன உத்தியில் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் உள்ள காற்றாலைகளைத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பராமரித்து குமரியைப் பசுமை மாவட்டமாக உருவாக்கும் முழு முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் காற்றாலைகள் மூலமாக அதிகமான மின்சாரம் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே இங்கு இருக்கும் பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கும், புதிய காற்றாலைகள் நிறுவுவதற்கும் தகுதியான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காகப் புதுச்சேரியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் வாயிலாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கெனத் தனித்துவம் கொண்ட வளர்ச்சித் திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளாம். நான் சட்டப்பேரவை உறுப்பினராகக் கடந்த ஆட்சியில் இருந்தபோது காற்றாலை குறித்த பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்தேன். ஆனால் அதைப்பற்றிச் சிந்திக்காமல் உதாசீனப்படுத்தினர். தற்போது அந்த நிலையை மாற்றி, காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்தி தமிழக மின்சார வாரியத்திற்கு வழங்குவதற்கும், காற்றாலை உற்பத்தியை நவீன உத்தியுடன் பெருக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
காற்றாலை வாயிலாக அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தினைத் தமிழக அரசின் உதவிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனை மற்றும் உதவிகளுடன் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம். வருங்காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, காற்றாலை உற்பத்திக்குத் திமுக அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
இவ்வாறு அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
ஆய்வின்போது காற்றாலை ஆலோசகர்கள் ஜோதிநாத், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, தோவாளை ஊராட்சித் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT