Published : 30 Sep 2021 01:44 PM
Last Updated : 30 Sep 2021 01:44 PM
புதுச்சேரியில் காங்கிரஸ் தான் முதன்மையான கட்சி, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இரு எம்எல்ஏக்கள் மட்டுமே வென்றனர். தற்போது எதிர்க்கட்சியாக திமுக உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணிக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் முதலில் கூட்டவில்லை. முதலில் திமுக அலுவலகத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.அதன்மூலம் கூட்டணிக்கு திமுக தலைமை வகிப்பதாக சூசகமாக உறுதிப்படுத்தியது. இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.
இப்போது இந்த கூட்டணி தொடருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை 3 தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர். இந்த பார்வையாளர்களான பிரவீன்சக்ரவர்த்தி, மீனாட்சி நடராஜன், ஜோதிமணி எம்பி ஆகியோர் புதுவைக்கு வந்துள்ளனர். இன்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பை தொடங்கினர். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வரவேற்றார்.
தொடர்ந்து பிரவீன்சக்ரவர்த்தி பேசுகையில், " உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருத்துகேட்க வந்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை பலப்படுத்த முடியும். கட்சியின் அடிப்படையையும் பலப்படுத்தலாம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். ஆனால் மொத்தமாக படுத்துவிடக்கூடாது. தொண்டர்களின் கருத்தை கேட்கத்தான் டெல்லியிலிருந்து எங்களை அனுப்பியுள்ளனர். உங்களின் கருத்துக்களை தனித்தனியாக தெரிவிக்கலாம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், " உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணி தொடர்பாக இருவேறு கருத்துகள் உள்ளன. கூட்டணி வேண்டும், கூட்டணி வேண்டாம் என்று பரவலாக கருத்து உள்ளன. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் மதச்சார்பற்ற கூட்டணி உள்ளது.
புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி. தொண்டர்களும், தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கு நல்ல படிப்பினையை கொடுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் கடந்த காலத்தை பற்றி பேசி எந்த பயனும் இல்லை. காலம்தான் விரயமாகும்." என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து எம்.பி. வைத்திலிங்கம். முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை மேலிட பார்வையாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT