Published : 29 Sep 2021 05:04 PM
Last Updated : 29 Sep 2021 05:04 PM
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கள ஆய்வு செய்தார்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு இன்று (செப்.29) காலை சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் படகில் சென்று, கழிமுக ஆற்றுப்பகுதியில் உள்ள திட்டில் வலுவடைந்த நிலையில் உள்ள சுற்றுலா மையத்துக்குச் சொந்தமான கட்டிடங்களைப் பார்வையிட்டனர்.
பின்னர், படகு சவாரி செய்தபடி சுரபுன்னை காடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சுற்றுலா மையத்தில் படகு குழாம், உயர் கோபுரம், அறைகள், கழிப்பறைகள், பூங்கா உள்ளிட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனால் உலகப் பிரசித்தி பெற்ற அலையாத்தி காடுகளைக் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
இங்குள்ள உணவு விடுதி, தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஆய்வு செய்யப்பட்டது. வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் குடிநீர், சுகாதார வசதி போன்ற வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக எந்தெந்த வசதிகளைச் செய்யலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன்.
படகு சவாரி காலையில் தொடங்கும் நேரத்தை முன்னதாகவே தொடங்கவும், மாலையில் படகு சவாரி முடியும் நேரத்தை நீட்டிக்கவும் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு ஆய்வு செய்ததன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுப் பணிகள் தொடங்கப்படும்.
சுற்றுலா மைய ஊழியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்களா எனவும், உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து கேட்டறிந்தேன். இங்கு தரமான உணவு விடுதி அமைக்கவும், தங்கும் அறைகளும் விரைவில் சீரமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வரும்.
ஏற்கெனவே இந்தப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் விடியல் விழாவும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு கடல் உணவுத் திருவிழாவும் நடத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற விழாக்களை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இதைக் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்".
இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT