Published : 29 Sep 2021 03:26 PM
Last Updated : 29 Sep 2021 03:26 PM

பறவைகளின் கூடாரமாக மாறிய ஜெ. சிலை; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?- ஓபிஎஸ் சந்தேகம்

சென்னை 

மாநில உயர்‌ கல்வி மன்ற வளாகத்தில்‌ உள்ள ஜெயலலிதாவின்‌ ஒன்பது அடி உயர வெண்கலச்‌ சிலை பராமரிப்பு இல்லாமல் பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும், இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’பெண்‌ கல்விக்கு முக்கியத்துவம்‌ அளித்தது, மாநில சுயாட்சிக்குத் தொடர்ந்து குரல்‌ கொடுத்தது, சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தது, முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்‌ மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது, விலையில்லா அரிசித்‌ திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்‌ பாதுகாப்பு அளித்தது, கட்டணமில்லாக்‌ கல்வி உட்பட அனைத்தையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு விலையில்லாமல்‌ வழங்கியது, அன்னதானத்‌ திட்டத்தை செயல்படுத்தியது, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்தைச் செயல்படுத்தியது என எண்ணற்ற நலத்‌ திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்காகத் தன்‌ வாழ்க்கையையே அர்ப்பணித்து, மறைந்தும்‌ மறையாமல்‌ தமிழக மக்களின்‌ மனங்களில்‌ குடிகொண்டிருக்கும்‌ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கவுரவிக்கும்‌ வகையில்‌, சென்னை, காமராஜர்‌ சாலை, மாநில உயர்‌ கல்வி மன்ற வளாகத்தில்‌ ஜெயலலிதாவின்‌ ஒன்பது அடி உயர வெண்கலச்‌ சிலை 28-01-2021 அன்று திறந்து வைக்கப்பட்டதோடு, அந்த வளாகத்திற்கு 'அம்மா வளாகம்‌' என்றும்‌ பெயர்‌ சூட்டப்பட்டது.

அதிமுக ஆட்சி இருந்தவரை அவரின்‌ சிலை நல்ல முறையில்‌ பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தச்‌ சூழ்நிலையில்‌ தமிழ்நாடு சட்டப்‌பேரவைக்குப் பொதுத்‌ தேர்தல்‌ நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்டதையடுத்து பராமரிப்புப்‌ பணிகள்‌ அரசாங்கத்தால்‌ சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதாவின்‌ சிலை உயர்‌ கல்வி மன்ற வளாகத்திற்குள்‌ இருப்பதாலும்‌, அதைச்‌ சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு, பூட்டப்பட்டு இருப்பதாலும்‌ மாநகராட்சிப்‌ பணியாளர்களும்‌ அதைப் பராமரிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் அவரின்‌ சிலை பறவைகளின்‌ கூடாரமாக மாறிவிட்டது. இந்தச்‌ சிலையைச் சுற்றி புற்கள்‌ மண்டிப்போய்‌ கேட்பாரற்ற நிலையில்‌ இருப்பதோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒளிவிளக்குகள்‌ எரியாமல்‌ பழுதடைந்த நிலையில்‌ உள்ளன.

இந்தச்‌ சிலையை நன்கு பராமரிக்கவும்‌, பழுதடைந்த ஒளி விளக்குகளை மாற்றவும்‌ பொதுப்‌பணித்‌துறை முதன்மைப்‌ பொறியாளருக்கும்‌, தொழில்‌நுட்பக்‌ கல்வி ஆணையருக்கும்‌ அதிமுக‌ சார்பில்‌ மனுக்கள்‌ அளிக்கப்பட்டுள்ளன. தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ கீழும்‌ சில விவரங்கள்‌ கோரப்பட்டுள்ளன. ஆனால்‌, எதற்கும்‌ எந்தவிதமான பதிலும்‌ இதுவரை பெறப்படவில்லை.

அரசாங்கத்தின்‌ சார்பிலும்‌ ஜெயலலிதாவின்‌ சிலையையும்‌, அதைச்‌ சுற்றியுள்ள இடத்தையும்‌ பராமரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகத்‌ தெரியவில்லை. ஆறு முறை தமிழ்நாட்டின்‌ முதல்வராக இருந்த ஜெயலலிதாவின்‌ சிலையைப் பராமரிப்பதில்‌ அரசு பாராமுகமாக நடந்துகொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டின்‌ முன்னேற்றத்திற்காக, தமிழக மக்களின்‌ முன்னேற்றத்திற்காகத் தன்‌ வாழ்வையே அர்ப்பணித்த, தமிழ்நாட்டின்‌ தன்னிகரில்லாத்‌ தலைவராக விளங்கியவரின்‌ சிலையைப் பராமரிப்பதில்‌ அரசு ஏன்‌ மவுனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியல்‌ காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம்‌ என்ற சந்தேகம்‌ அதிமுக தொண்டர்கள்‌ மத்தியிலும்‌, தமிழக மக்களின்‌ மத்தியிலும்‌ எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மாநில உயர்‌ கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதாவின்‌ ஒன்பது அடி வெண்கலச்‌ சிலையைப் பராமரிக்கத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்‌ அல்லது சிலை பராமரிப்பை அதிமுகவிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x