Published : 29 Sep 2021 01:01 PM
Last Updated : 29 Sep 2021 01:01 PM

10 ஆண்டுக்குப் பிறகு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, ரூ.24.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2021) சேலம் மாவட்டம், வாழப்பாடி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் 1250 மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு 24 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021- 22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1000 சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏழை எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு, அதனைச் சரி செய்வதற்காக மட்டுமே மருத்துவர்களையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனைத் தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட, ’கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் பயன்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்றுப் பயனடைவார்கள்.

பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீனப் பரிசோதனை சாதனங்களால் நோய்களைக் கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வுக் கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பன்முனை மருத்துவப் பரிசோதனை, கண், பல், காது - மூக்கு - தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும், வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து, எந்தெந்த நாட்களில், எந்தெந்த மருத்துவக்குழு, எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து முகாம்கள் நடத்தப்படும். போக்குவரத்து வசதி அதிகமில்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமின்போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சி, கிராமப்புற மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படின், நோயின் தன்மையைப் பொறுத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல வேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாகக் கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்ட முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், குடும்ப நலம், இந்திய மருத்துவம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம், கண்பார்வை இழப்பு தடுப்பு நிறுவனம், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், சமூக நலத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை போன்ற அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படும்.

சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நற்சான்றிதழ்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு 1 கோடியே 62 லட்சம் ரூபாய் நிவாரண நிதி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 21 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 618 உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் 6 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் மூலம் 115 குழுக்களில் உள்ள 1,443 உறுப்பினர்களுக்கு சுய உதவிக்குழு கடனுதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பொருளாதாரக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 117 சுய உதவிக் குழுக்களுக்கு 11 கோடியே 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருளாதாரக் கடனுதவிகள், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 14 உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 கோடியே 91 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்விக் கடனுதவிகள் என மொத்தம் 24 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x