Published : 16 Mar 2016 08:18 AM
Last Updated : 16 Mar 2016 08:18 AM

ரியல் எஸ்டேட் சட்டத்தால் யாருக்கு பலன்? - கட்டுமானத் துறை நிபுணர்கள் கருத்து

ரியல் எஸ்டேட் மசோதா மாநிலங் களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 500 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள் இந்த ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். பணப் பரிவர்த்தனைகளை ஆணையம் கண்காணிப்பதன் மூலம் கருப்பு பண புழக்கம் குறையும்.

பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை வாடிக் கையாளர்களுக்கு விற்கக்கூடாது.

திட்ட வரைபடத்தில் ஆரம்பித்து, அரசு அங்கீகாரம், அனுமதி, கட்டு மானம் உள்ளி்ட்ட அனைத்து விவரங்களையும் கட்டுமான நிறுவனங்கள் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளரிடம் கட்டுமான நிறுவனம் பெறும் முன்தொகை பணத்தில் 70 சதவீத தொகையை வங்கியில் தனிக்கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை கட்டி முடிக்காவிட்டால் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்களுக்கு கட்டு மான நிறுவனம் வட்டித் தொகை வழங்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு வீட்டில் ஏதா வது பழுது ஏற்பட்டால் அதற்கு கட்டுமான நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும். நிறுவ னங்களுக்கும், வாடிக்கையாளர் களுக்குமிடையே பிரச்சினை எழுந்தால் மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையிடலாம்.

கட்டுமான நிறுவன அதிபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர் களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண் டனையும் வாடிக்கையாளர்கள், ஏஜெண்டுகள் முறைகேடு செய்தால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இது போன்ற பல சாரம்சங்களை உள்ளடக்கியது இந்த மசோதா.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கட்டுமானத்துறை வல்லுநர்கள் கூறியதாவது:

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சென்னை தலைவர் ஓ.கே.செல்வராஜ்:

வீடு வாங்குபவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பான உத்தரவாதம் அளிக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பதன் மூலம் பில்டர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். 70 சதவீத தொகையை முதலீடு செய்து அதை எந்த திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால், இனி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் அரசாங்கமும் பில்டர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முறை யாக செய்து கொடுக்க வேண்டும்.

இனி யாரும் பொய் சொல்லி விற்பனை செய்ய முடியாது. அதேநேரம் முதலீடுகள் அதிகள வில் பெருகும். இந்த மசோதாவால் முதலீட்டாளர்களுக்குத்தான் லாபம் அதிகம்.

இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் சென்னை மண்டல உறுப்பினரான ரூபி ஆர்.மனோகரன்:

இந்த மசோதா இதே நிலையில் சட்டமாக்கப்பட்டால், விலையேற்றம் கண்டிப்பாக இருக்கும். அதன்பாதிப்பு மக்களைத்தான் சென்றடையும். கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் கார்ப்பரேட் பில்டர்களைத் தவிர நடுத்தர மக்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் சின்ன, சின்ன பில்டர்கள் இனி காணாமல் போய்விடுவார்கள்.

பில்டர்களுக்கு கடிவாளம் போடுவதற்காக மட்டுமே இந்த சட்டம் என இல்லாமல், தொழிலை ஊக்குவிக்கும் வகை யில், பில்டர்களுக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த வேண்டும். முதலீட்டாளர் களுக்கு நன்மை செய்வதாக கருதி, பில்டர்களை முடக்கக்கூடாது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன்:

இதுவரை எந்தவொரு கட்டுப் பாடும் இல்லாமல் இருந்த பில்டர்களை முதல்முறையாக ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து கண்காணிக்கும் வாய்ப்பை இந்த சட்டம்தான் தரப்போகிறது. இதன்மூலம் முதலீட்டாளர்கள் சட்டத்தின் துணை யோடு நிம்மதியாக பணத்தை முதலீடு செய்ய முடியும்.

அதேநேரம் இந்த மசோதாவில் அரசுத்துறை அதிகாரிகளையும் ஓர் அங்கமாக சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். முறையான அங்கீகாரம், அனுமதி தரக்கூடிய அரசு அதிகாரிகளையும் இதில் சேர்த்து இருக்க வேண்டும். எல்லா பரிவர்த்தனைகளும் வங்கி காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என அறிவித்து இருந்தால் கருப்பு பண புழக்கம் குறையும். அதிகாரிகளை சரிகட்டி நீர்நிலைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளில் பில்டிங் கட்ட முடியாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ரியல் எஸ்டேட் துறையில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் இருந்து வந்த பில்டர்களுக்கு இந்த சட்டம் ஒரு மூக்கணாங்கயிறு. இதனால் மவுலிவாக்கம் போன்ற சம்பவங்கள் இனி நேராது.

சென்னை ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் சங்க செயலாளர் கே.சந்திரசேகர்:

சரிவில் இருந்து ரியல் எஸ்டேட் தொழில் மீண்டு எழுவதற்கு இந்த மசோதா உதவும். வாடிக்கையாளர்கள் இனி கட்டுமானத்துறையில் நம்பிக்கையோடு முதலீடு செய்வர். கட்டுமானத்துறையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள் மட்டுமே இனி ஜெயிக்க முடியும். பில்டர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் - பில்டர் களுக்கிடையே இந்த சட்டத்தின் வாயிலாக அரசாங்கமும் உள்ளே புகுந்து கண்காணிப்பதால் வீடு வாங்குபவர்களின் நம்பிக்கைக்கு புத்துயிர் கிடைக்கும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எனும்போது இரு தரப்பும் பரஸ்பரம் ஒத்துழைக்கும். அத்துடன் விழிப்புணர்வு அதிகரிக்கும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x