Published : 28 Sep 2021 10:43 PM
Last Updated : 28 Sep 2021 10:43 PM
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற அணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக கூட்டியது. தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை அடுத்தக்கூட்டங்களைக் கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.
புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டி வருவது வழக்கம். இம்முறை உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸ் இக்கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டவில்லை.
அதையடுத்து புதுச்சேரி மாநில மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக்கழக அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் இன்று இரவு நடைபெற்றது.
இதில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வநாதன், ஆதவன், எழில்மாறன், மதிமுக மாநில பொறுப்பாளர் கபிரியேல், செல்வராசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகமது உமர் பாரூக், முகமது இப்ராஹிம், மனித நேய மக்கள் கட்சி பிரகாஷ், முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், "பாஜக புதுச்சேரியில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்தது. ஆறே எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு 10 எம்.எல்.ஏ.க்கள் கொண்டுள்ள என்.ஆர்.காங்கிரசை மிரட்டி பணிய வைத்து ஆட்சி அதிகாரத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை பறித்துக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பறித்துக் கொண்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்குள் ஏற்பட்ட பிணக்குகளை புறந்தள்ளி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பெற்றி பெற நமது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி ஏற்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
வழக்கமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பதிலாக திமுக அலுவலகத்தில் கூட்டத்தை கூட்டியதன் மூலம் இக்கூட்டணிக்கு தலைமை வகிப்பதை திமுக உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக கட்சி வட்டாரங்களில் பேசுகையில், "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் முதல்முறையாக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக கூட்டத்தை கூட்டினர். கட்சிகள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைப்பை மையப்படுத்தி பேசினோம். அடுத்தக்கட்டமாக நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. அதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் இறுதி செய்யப்படும்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT