Last Updated : 28 Sep, 2021 08:27 PM

 

Published : 28 Sep 2021 08:27 PM
Last Updated : 28 Sep 2021 08:27 PM

கோவையில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்: விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல்

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் சமூக நலத்துறையினர்.

கோவை

கோவை மாவட்டத்தில், குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய நாட்டில் பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் எனத் திருமணத்துக்கான சட்டபூர்வ வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட வயதுக்குக் கீழ் நடக்கும், எந்தத் திருமணமும் சட்டத்தை மீறிய திருமணமாகவே கருதப்படும். இதற்கிடையே கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அறியாமை, குடும்ப வறுமை போன்ற காரணங்களால் இவை நடக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொண்டாமுத்தூரில் 10 வயதான சிறுமிக்கும் 27 வயதான இளைஞருக்கும் குழந்தைத் திருமணம் நடக்க இருந்தது. குழந்தைத் திருமணம் நடந்தால் மட்டுமே போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். குழந்தைத் திருமணத்தை நடத்த முயன்றாலே போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 53 குழந்தைத் திருமணங்களும், 2020-ல் 78 குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு இதுவரை 88 குழந்தைத் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, 66 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 22 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தடுக்க குழந்தைத் திருமணம், போக்சோ ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்படுகிறது. குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவிலும், பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குழந்தைத் திருமணம் செய்தால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்து எச்சரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x