Last Updated : 28 Sep, 2021 08:16 PM

 

Published : 28 Sep 2021 08:16 PM
Last Updated : 28 Sep 2021 08:16 PM

உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வழங்கும் ரசீதில் எஃப்எஸ்எஸ்ஏஐ உரிம எண்ணை அச்சிடுவது அக்.1 முதல் கட்டாயம்: மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தகவல்

கோவை

உணவுப் பொருள் விற்பனை ரசீதில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வழங்கியுள்ள உரிம எண்ணை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர்களுக்கும் எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த உத்தரவு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

''மக்களுக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், எஃப்எஸ்எஸ்ஏஐ, 14 இலக்க உரிம எண் வழங்குகிறது. இந்த எண், உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட், பாட்டில், அட்டைப் பெட்டி போன்றவற்றின் வெளிப்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். எனினும் பல உணவுப் பொருட்கள், எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் இன்றி விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் தரக்குறைவான உணவுப் பொருட்கள் குறித்து நுகர்வோர் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வழங்கும் ரசீதில், எஃப்எஸ்எஸ்ஏஐ உரிம எண்ணை அச்சிடுவது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கெனவே உரிமம் பெற்று உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவரை உரிமம் பெறாமல் இருப்பவர்கள், உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் இருப்பது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அவர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் எந்த உணவுப்பொருள் வாங்கினாலும் அதற்குரிய ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். ஏதேனும் புகார் மீது நடவடிக்கை எடுக்க இந்த ரசீதில் உள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ எண் உதவிகரமாக இருக்கும்''.

இவ்வாறு டாக்டர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x