Published : 28 Sep 2021 06:32 PM
Last Updated : 28 Sep 2021 06:32 PM
பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பணிக்காக மருத்துவப் பணி நியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மூன்று கட்டங்களாக செவிலியர்கள் தற்காலிகமாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிகப் பணி நியமன ஆணையைப் பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 28) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தம் உயிரைப் பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றிய செவிலியர்களைப் போராட வைத்து தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
முதல்வரோ அல்லது மருத்துவத்துறை அமைச்சரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தம் உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றிய செவிலியர்களை போராட வைத்து தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 28, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT