Published : 28 Sep 2021 03:42 PM
Last Updated : 28 Sep 2021 03:42 PM
அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை என்றும், அம்மா மினி கிளினிக், அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடி போன்றவை விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகக் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, தொடர்ந்து அதைச் செய்து வருகிறார்கள். மக்களைத் தேடி மருத்துவம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தினந்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், மருந்துகள் அளிப்பதுமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 அறிவிப்புகள் மருத்துவத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் மிகவும் பிரதானமான திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமாகும். இத்திட்டம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2011-க்குப் பிறகு கடந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி நாளை (29-9-2021) சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. கூட்டத்தொடரில் இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 1000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 385 வட்டாரங்கள் இருக்கின்றன. இந்த வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் நடத்தினாலும் ஆண்டுக்கு 1,155 முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிகள் மொத்தம் 21 இருக்கின்றன. ஒரு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 வீதம் 80 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 15 மருத்துவ முகாம்கள் எனச் சேர்த்து ஆண்டுதோறும் 1,240 மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. இம்மருத்துவ முகாம்களுக்கான தொடக்க விழாவை முதல்வர் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
இம்மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்குப் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் நோய் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர், முதியோர் நலன் உள்ளிட்ட பதினாறு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் உயர் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யப்படவிருக்கின்றன.
அம்மா மினி கிளினிக்கிற்குத் தற்போது அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் கூட அம்மா மினி கிளினிக்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். நான் சட்டப்பேரவையில்கூட அம்மா மினி கிளினிக்குகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன். விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் அவை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால், அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவை இயங்கவில்லை. இவை விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT