Published : 28 Sep 2021 01:58 PM
Last Updated : 28 Sep 2021 01:58 PM

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

''தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி முகாம்கள் மத்திய அரசுக்குத் திருப்திகரமாக உள்ளன. இதனால் ஜூன் மாதத்தில் நமக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 52 லட்சமாக இருந்தது. அது ஜூலை மாதத்தில் 55 லட்சமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் சுமார் ஒரு கோடி வரையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் அதைவிடக் கூடுதலாகத் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி நிலையம் அமைப்பதற்குத் தொடர்ந்து அனுமதி கோரி வருகிறோம். அங்கு சட்டச் சிக்கல் மட்டுமல்லாது நிர்வாகச் சிக்கலும் இருக்கிறது. விரைவில் அதற்கும் உரிய தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு 4,800 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றின் தன்னார்வலர்களை இணைத்து இந்தத் திட்டம் சிறப்பாகச் சென்று கொண்டுள்ளது. இனி கூடுதலாக நியமிக்கப்பட உள்ள 4,800 செவிலியர்கள் இந்தப் பணியை மேற்கொள்வார்கள். கரோனா காலத்தில் இந்தப் பணிக்குத் தகுதியுள்ள செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வருமுன் காப்போம் என்ற திட்டத்தில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இருப்போரே பணியில் ஈடுபடுவர்.

புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மருத்துவ இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,650 இடங்கள் இருக்கின்றன. இதில் முதல் கட்டமாக 850 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் சீரமைப்புப் பணிகளைச் செய்ய ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் அதைச் சரிசெய்தவுடன் ஆய்வுக் குழுவை மீண்டும் தமிழகத்துக்கு அழைக்க உள்ளோம். இதையடுத்து 1,650 மாணவர்களையும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x