Published : 28 Sep 2021 11:27 AM
Last Updated : 28 Sep 2021 11:27 AM

சீரழியும் சிறுவர்கள்; சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 28) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.

தமிழகத்தில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் இரு மடங்குக்கும் கூடுதலாகியிருப்பதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 1,603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக் கூறி கைது செய்யப்பட்டனர்.

அடுத்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், சிறுவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன. 2020-ம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.61% மட்டுமே அதிகரித்து 1,661 ஆகியுள்ள நிலையில், சிறுவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் 116.66% அதிகரித்து, 104 ஆக உயர்ந்துள்ளன.

சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்தான் கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை மிகவும் கவலையளிக்கக்கூடியவை ஆகும்.

கொலைக் குற்றங்கள் மட்டுமின்றி பிற குற்றங்களிலும் சிறுவர்கள் ஈடுபடுவது பெருகி வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020-ம் ஆண்டில் தேசிய அளவில் சிறுவர்கள் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களைத்தான் இந்தியாவை வல்லரசாக்கக் கூடியவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைத்திலும் சிறந்தவர்களாக வளரவேண்டிய அவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிக்கிச் சீரழிவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது முதன்மைக் கடமையாகும்.

எந்தக் குழந்தையும் பிறக்கும்போது தீயவர்களாகவோ, குற்றச் செயல்களைச் செய்பவர்களாகவோ பிறப்பதில்லை. வான்மழை எவ்வளவு தூய்மையானதோ, அதே அளவுக்குக் குழந்தைகளும் தூய்மையானவர்கள். ஆனால், 'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு' என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க குழந்தைகளும், சிறுவர்களும் எந்தச் சூழலில் வாழ்கிறார்களோ, அந்தச் சூழலில் ஆதிக்கம் செலுத்துபவர்களைப் போலவே மாறிவிடுகின்றனர்.

குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் சிறுவர்களை மூளைச்சலவை செய்து திருட்டு முதல் கொலை, கொள்ளை வரை அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடக்கத்தில் குற்றங்களைச் செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் பல சிறுவர்கள், பின்னர் தொழில்முறைக் குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர்.

பதின்வயதில் குற்றங்களைக் குற்றம் என்று அறியாமலேயே அவற்றைச் செய்வது சாகசம் என்று நினைக்கும் சிறுவர்களின் மனநிலையை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது, 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை குறைவு என்பதால், சமூக விரோதிகள் சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்வது, ஏழைச் சிறுவர்கள் செல்பேசி உள்ளிட்ட தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும்போது, அவற்றை வாங்கித் தருவதாக ஆசை காட்டி சிறுவர்களைக் குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துவது, மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தடையின்றிக் கிடைப்பது போன்றவைதான் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மிக முக்கியக் காரணமாகும். இந்த தீய வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

இளம் தளிர்கள் வளரும்போதே களைகளாக மாறுவது வேதனையளிக்கும் விஷயமாகும். இதற்கான காரணங்கள் என்னென்னவென்று கண்டுபிடித்து அவற்றைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை தரமான, சுகமான, சுமையற்ற, ஒழுக்க நெறிகள் மற்றும் விளையாட்டுடன் கூடிய கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், சட்டம், காவல்துறை, சீர்திருத்தப் பள்ளிகள் உள்ளிட்டவற்றை விடக் குழந்தைகள் தவறான வழியில் திசைமாறிச் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

சென்னையில் காவல்துறையினரால் நடத்தப்படும் காவல் சிறார் மன்றங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாகக் குறைந்து வருகிறது.

இத்தகைய பள்ளிகள் அதிகரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்களுக்கு இயல்பாக உள்ள கல்வி மற்றும் கலை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x