Published : 30 Mar 2016 01:12 PM
Last Updated : 30 Mar 2016 01:12 PM
பரிந்து விரிந்து இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, தென்காசியை தலைமை யிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண் டும் என்ற பிரதான கோரிக் கையுடன், தென்காசி பகுதி மக்கள் இத்தேர்தலையும் சந்திக்கிறார்கள். இத்தொகுதியில் போட்டியிட உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு அவர்களது எதிர் பார்ப்பு.
பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் இத்தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சரத்குமார் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர். இதுபோல் கடந்த பல தேர்தல்களில் வெற்றிபெற்றிருந்த கருப்பசாமிபாண்டின், பீட்டர் அல்போன்ஸ், ரவிஅருணன் ஆகி யோரும் இத் தொகுதிக்கு உட் பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. இம்மாவட்டத்தில் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தொகுதிக்கே வராதவர்கள்
தொகுதிவாசி ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் மக்களின் பிரச்சினைகளை அவரால் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் வெளியூர்வாசியாக இருந்தால் பெரும்பாலான நாட்களில் தொகுதி பக்கமே பார்க்க முடிவதில்லை. இந்த குறைபாடு தமிழகத்தில் பல்வேறு சட்டப் பேரவை தொகுதி மக்களுக்கு இருப்பதுபோல் தென்காசி தொகுதி மக்களுக்கும் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகால அனுபவம்தான் அவர்களை இந்த வகையில் சிந்திக்க வைத்திருக்கிறது.
குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் சாரல் விழாவின்போதும், ஒருசில விழாக்களின்போதும் விருந்தாளி போல் வந்துசெல்லும் நபர்களை, இத் தொகுதியில் போட்டியிட பிரதான கட்சிகள் இம்முறை நிறுத்தாமல், உள்ளூர் பிரமுகர் களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. காரணம் இத் தொகுதி யில் நிறைவேற்றப்பட வேண்டி யவை ஏராளம் இருக்கின்றன.
கோரிக்கைகள் ஏராளம்
தென்காசி தொகுதியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இத் தொகுதியில் குற்றாலம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் குற்றாலத்துக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் இன்னும் ஆரம்ப நிலையைக்கூட எட்டவில்லை.
குற்றாலம்
குற்றாலத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள்தோறும் வெற்றிபெற்ற, தோல்வியுற்ற வேட்பாளர்கள் அனைவரும் வாக்குறுதியை அளித்து சென்றிருக்கிறார்கள். இந்த தேர்தலிலும் இந்த வாக்குறுதியை எதிர்பார்க்கலாம்.
குற்றாலம் மலைப்பகுதியில் அணை கட்டி தண்ணீர் தேக்கினால் ஆண்டு முழுவதும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுவதுடன் விவசாயமும் செழித்தோங்கும். மழை காலங்களில் அடிக்கடி அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாகச் செல்வதையும் தடுக்கலாம். குற்றாலம், தென்காசி பகுதியில் நன்செய் நிலங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதித்து இயற்கையை பேணி பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குக்காக குற்றாலம் பகுதியில் தீம் பார்க் அமைக்க வேண்டும். மேலும் மெயினருவி பகுதியில் விஞ்ச் அமைக்க வேண்டும். குற்றாலம் மலைப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி சிற்றாற்றின் கரைகளை சீரமைத்து ஆற்றில் சிமென்ட் லைனிங் அமைத்து ஆற்று தண்ணீர் முறையாக விவசாயத்துக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிற்றாற்றில் சாக்கடை மற்றும் குப்பை கலப்பதை தடுக்க வேண்டும். சிற்றாற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.
மர அரவை ஆலைகள்
இத் தொகுதியில் கயிறு, மர அரவை ஆலைகள் அதிகளவில் உள்ளன. இத்தொழிலை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சி பெறவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விவசாயிகளின் நலனுக்காக காய்கறி, மலர்களை பதப்படுத்தி பாதுகாக்க குளிர்சாதன வசதியுடன் கிட்டங்கி அமைக்கட வேண்டும். தென்காசியில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், புறவழிச்சாலை, தென்காசியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் என்றெல்லாம் இத் தொகுதி மக்களின் கோரிக்கை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இப்பட்டியலில் உள்ளவற்றில் சிலவற்றையாவது நிறைவேற்றும் வகையில், உள்ளூர் மக்களின் தேவைகளை, பிரச்சினைகளை நேரில் பார்த்து, உணர்ந்து, அவற்றுக்கான தீர்வுக்கு முனையும் உள்ளூர்வாசிகளை தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT