Published : 19 Mar 2016 02:18 PM
Last Updated : 19 Mar 2016 02:18 PM
மதுரையில் ஆறு மாதம் மழை இல்லாவிட்டாலே நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விடுகிறது. இதற்குக் காரணம், ஒரு காலத்தில் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த கண்மாய்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் அழிந்து விட்டதே. அரை நூற்றாண்டுக்கு முன் கடல்போல காட்சி அளித்த பல கண்மாய்கள் தற்போது கட்டிடங்களாக எழும்பி நிற்கின்றன.
அழிவின் விளிம்பில் இருக்கும் மற்றொரு நீராதாரம் செல்லூர் கண்மாய். 150 ஆண்டுகளுக்கு முன் 250 ஏக்கருக்கு மேல் விரிந்திருந்தது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பால் சுருங்கி, தற்போது 60 ஏக்கருக்கும் குறைவாக வந்து விட்டது. சாத்தையாறு அணை மற்றும் சுற்றுவட்டாரக் கண் மாய்கள் நிரம்பி மிளகரணை, குலமங்கலம், லட்சுமிபுரம், பனங்காடி, பூதகுளம், ஆனையூர், ஆலங்குளம், முடக்கத்தான் கண்மாய்களை கடந்து செல்லூர் கண்மாய்க்குத் தண்ணீர் வருகிறது. இந்த கண்மாய் நிரம்பி உபரிநீர் வைகை ஆற்றுக்கு செல்கிறது.
ஒரு காலத்தில் செல்லூர் கண்மாய் மூலம் முப்போகம் விளைந்த நிலங்கள் செல்லூர் முதல் கோரிப்பாளையம் வரை இருந்துள்ளன. இன்று அந்த இடங்கள் எல்லாம் கட்டிடங்களாக, நெரிசல் மிகுந்த சாலைகளாகி விட்டன.
செல்லூர் கண்மாய் நிரம்பி 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட் டதால், வைகை ஆற்றுக்கு இந்தக் கண்மாயில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்வதில்லை. கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்குச் சென்ற கால்வாயும் மாயமாகி விட்டது. தற்போது ஆகாயத் தாமரைகள், பாசிகள் படர்ந்து செல்லூர் கண்மாய் பாழடைந்து கிடக்கிறது. அமைச் சரின் சொந்த ஊரில் இருக்கும் இந்த கண்மாயை தூர்வாரி ஆழப் படுத்த அவரும், அரசு அதிகாரி களும் நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செல்லூரைச் சேர்ந்த முதியவர் சோலை (70) கூறியதாவது;
1996-ம் ஆண்டு ஏற்பட்ட மழையில், இந்தக் கண்மாய் உடைந்து செல்லூரில் பெரிய வெள்ளம் வந்தது. எல்லோரும் மாடிகளில் ஏறி தப்பினோம். அதற்கு முன் வரை, நெசவுத் தொழிலில் இப்பகுதியினர் செல்வாக்குடன் இருந்தனர். கண்மாய் மூலம் விவசாயமும் நடந்தது. வெள்ள பாதிப்புக்குப் பின் செல்லூர் கண்மாயும் நிரம்பவில்லை. இப்பகுதி மக்களின் வாழ்க்கையும் முன்னேறவில்லை. முன்பு நகரின் அடையாளமாக இருந்த செல்லூர், மிகவும் பின்தங்கிய பகுதியாகி விட்டது. தற்போது நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தாலும் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. அத னால், குட்டை போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்மாய் நிரம்பினால் ஊருக்குள் வெள்ளம் புகாமல் இருக்க ஷட்டர்களை அமைத்தனர். ஆனால், இந்த ஷட்டர்களும் பழுதடைந்து விட் டன. பெரும் மழை பெய்தால் 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிச்சயம் மீண்டும் ஏற்படும் என்றார்.
பாலைவனமாகி வரும் செல்லூர்
செல்லூர் கண்மாய் நிலத்தடி நீர் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திலகர் கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன் கண்மாயின் ஆழம் 18 அடியாக இருந்தது. தற்போது தூர் வாராததாலும், பராமரிப்பு இல்லாததாலும் சாலை மட்டமும், கண்மாய் மட்டமும் ஒரே அளவில் இருக்கிறது. ஆட்சியர், பொதுப்பணித் துறையினர், எம்எல்ஏ, முதல்வர் வரை இக் கண்மாயை தூர்வார மனு கொடுத்து விட்டோம்.
25 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் அருகே 50 அடி 60 அடி தோண்டினாலே தண்ணீர் வரும். தற்போது 960 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீர் இல்லாமல் செல்லூர் பகுதி பாலைவனமாகி வருகிறது. இந்தக் கண்மாயை ஆழப்படுத்தி நிரந்தமாக தண்ணீரை தேக்கினால் 2 லட்சம் மக்கள் நீராதாரம் பெறுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT