Published : 27 Sep 2021 02:21 PM
Last Updated : 27 Sep 2021 02:21 PM

கோ- ஆப்டெக்ஸ் பணி நேரம், கழிப்பிடப் பிரச்சினை; போராட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை

கோ- ஆப்டெக்ஸில் கூடுதல் பணி நேரம், பல விற்பனையகங்களில்‌ கழிப்பிட வசதிகள்‌ இல்லாமை, உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படாதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''தமிழ்நாடு அரசின்‌ வேட்டி- சேலை வழங்கும்‌ திட்டம்‌, பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும்‌ திட்டம்‌, முதியோர்‌ ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி- சேலை வழங்கும்‌ திட்டம்‌ ஆகிய அரசுத்‌ திட்டங்களைச் செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்குச் சந்தைப்படுத்துவதில்‌ உறுதுணையாக இருந்து கைத்தறி ரகங்களைப் பிரபலப்படுத்துதல்‌, வாடிக்கையாளர்களின்‌ மாறிவரும்‌ ரசனைக்கேற்ப பாரம்பரியம்‌ மற்றும்‌ நவீன ரகங்களை உருவாக்குதல்‌; பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச்‌ செயல்படுத்துதல்‌; கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்‌ வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும்‌ நிறுவனமாக 'கோ-ஆப்டெக்ஸ்‌' என அனைவராலும்‌ அழைக்கப்படும்‌ தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கம்‌ விளங்குகிறது.

கைத்தறித்‌ துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி வரும்‌ இந்த கோ-ஆப்டெக்ஸ்‌ நிறுவனம்‌, தன்னுடன்‌ இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ விசைத்தறி நெசவாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்ளால்‌ உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும்‌ பரவியுள்ள தன்னுடைய நூற்றுக்கணக்கான கிளைகள்‌ மூலமாக விற்பனை செய்யும்‌ பணியினை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ முக்கியப்‌ பங்கினை வகிக்கும்‌ துணித்தொழிலைச் சந்தைப்படுத்தும்‌ பணியில்‌ ஈடுபட்டு வரும்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ நிறுவனத்தின்‌ விற்பனையகங்களில்‌ பல ஆண்டுகளாக இரவு 8 மணி வரை இருந்த பணி நேரம்‌ தற்போது 'இரவு 9 மணி வரை' என மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும்‌, இதனால்‌ 20 கிலோ மீட்டர்‌, 30 கிலோ மீட்டர்‌ தொலைவிலிருந்து பல பேருந்துகள்‌ மாறி பணிக்கு வரும்‌ பெண்கள்‌ மிகவும்‌ பாதிக்கப்பட்டுள்ளதாகவும்‌, இரவு நேரங்களில்‌ 9 மணிக்கு மேல்‌ பேருந்துகள்‌ கிடைக்காமல்‌ அவதிப்படக்கூடிய நிலைமை பெண்களுக்கு உருவாகியுள்ளதாகவும்‌ இன்று பத்திரிகையில்‌ செய்தி வந்துள்ளது.

இது மட்டுமல்லாமல்‌, பல விற்பனையகங்களில்‌ கழிப்பிட வசதிகள்‌ இல்லை என்றும்‌, தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில்‌ ஊதியம்‌ வழங்கப்படுவதில்லை என்றும்‌, சில அதிகாரிகள்‌ பெண்‌ ஊழியர்களிடம்‌ தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும்‌, விற்பனையில்‌ சரிவை ஏற்படுத்தும்‌ செயல்கள்‌ நடப்பதாகவும்‌ கூறப்படுகிறது.

இதற்குத்‌ தீர்வு காணும்‌ வகையில்‌, தமிழக முதல்வர்‌, கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை அமைச்சர்‌, தலைமைச்‌ செயலாளர்‌ ஆகியோரிடம்‌ கோரிக்கை மனுக்கள்‌ அளித்தும்‌ எந்தப்‌ பயனும்‌ இல்லை என்பதால்‌, வருகின்ற அக்டோபர்‌ 5ஆம்‌ தேதி கோ-ஆப்டெக்ஸ்‌ தலைமையகத்தில்‌ காத்திருப்புப் போராட்டம்‌ நடத்தப்‌போவதாகவும்‌, அதற்கும்‌ தீர்வு காணப்படவில்லையென்றால்‌, வேலை நிறுத்தப்‌ போராட்டம்‌ நடத்துவதைத்‌ தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ ஊழியர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளதாகப் பத்திரிகையில்‌ செய்தி வந்துள்ளது.

கோ-ஆப்டெக்ஸ்‌ ஊழியர்களுடைய கோரிக்கைகளில்‌ நிதி தொடர்பான கோரிக்கைகள்‌ ஏதும்‌ இல்லாத சூழ்நிலையில்‌, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதும்‌, அவர்களுடைய போராட்ட அறிவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும்‌ மாநில அரசின்‌ கடமை.

எனவே, தமிழக முதல்வர் இதில்‌ உடனடியாகத் தலையிட்டு, கோ-ஆப்டெக்ஸ்‌ ஊழியர்களுடைய பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம்‌ விரைந்து தீர்வு காண, தொடர்புடைய அமைச்சருக்கும்‌ அரசு அதிகாரிகளுக்கும்‌ உத்தரவிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x