Last Updated : 27 Sep, 2021 11:29 AM

 

Published : 27 Sep 2021 11:29 AM
Last Updated : 27 Sep 2021 11:29 AM

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர், தொழிற் சங்கத்தினர் கைது

தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற சமூக நீதிப் பேரவை அமைப்பினரைத் தடுத்து நிறுத்திய போலீஸார்.

திருச்சி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்

"3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல்- டீசல்- சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்துவதுடன் நகர்ப்புறங்களுக்கு அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, திருச்சியில் தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பூம்புகார் விற்பனை நிலையம் அருகில் விவசாய சங்கத்தினரும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இன்று (செப். 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய அமைப்பினர்.

தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் 500-க்கும் அதிகமானோரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் சிலர் போலீஸாரின் தடுப்பை மீறி தெப்பக்குளம் அஞ்சல் நிலைய வாசலுக்குச் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

இதேபோல், ஓயாமரி சுடுகாடு அருகே காவிரிப் பாலத்தில் வைகை ரயிலை மறிப்பதற்காகக் காத்திருந்த தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x