Published : 27 Sep 2021 10:42 AM
Last Updated : 27 Sep 2021 10:42 AM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் நேற்று நடைபெற்ற 1,600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2,13,763 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழக முதல்வர் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில், அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால், தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் 12.09.2021 அன்று 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2,02,931 கோவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட வேண்டும் என, முதல்வரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (26.09.2021) 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 25.09.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக, 32,70,822 முதல் தவணை தடுப்பூசிகள், 16,86,550 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என, மொத்தம் 49,57,372 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக, 7,71,153 முதல் தவணை தடுப்பூசிகளும் 2.,72,232 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என, 10,43,385 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 25.09.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 60,00,757 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம், 2,13,763 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்கின்ற நிலையில், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கலந்துகொண்டு கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT