Published : 27 Sep 2021 10:20 AM
Last Updated : 27 Sep 2021 10:20 AM

மத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

மத்திய அரசைக் கண்டித்து இன்று நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் நேற்று (செப். 26) வெளியிட்ட அறிக்கை:

"மோடி அரசின் வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி, திங்கள்கிழமை (செப். 27) நடைபெற இருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் எல்லா இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் திரளாகப் பங்கேற்று இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசின் வேளாண் விரோதச் சட்டங்களான விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்; வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம்; அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் ரத்து செய்யக் கோரியும், இலவச மின்சாரத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மின்சாரத் திருத்த மசோதாவை எதிர்த்தும் வரலாறு காணாத வகையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்தக் கோரிக்கைக்காகக் குரலெழுப்பின. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதிலேயே முனைப்பாக இருக்கிறது. விவசாயிகளின் குரலை அலட்சியம் செய்கிறது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூடுதல் வரிகளின் மூலமாக ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயக் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பொதுமக்கள் தமது ஆதரவை வழங்கிடவேண்டும். வர்த்தகர்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளோடு இணைந்து இந்த முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x