Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM
தமிழகத்தில் நேரிடும் சாலை விபத்துகளில் 50 சதவீதம் நெடுஞ்சாலைகளில்தான் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து துறையை சேர்ந்த வல்லுநர்கள் குழு புதிய திட்டம் வகுத்து, தமிழகஅரசிடம் வழங்கியது. இதையடுத்து, 2017-ல் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிய தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல, கடத்தல் போன்ற குற்றங்களைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, நாட்டில் அதிக சாலை விபத்துகள் நேரிடும் இடங்களில் 50-வது இடத்தை வகிக்கும், செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலை இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நேரிடுகின்றன.
ரூ.25 கோடி மதிப்பிலான இந்ததிட்டத்துக்கான டெண்டரில் 3 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.44 கோடி செலவாகும் எனத் தெரிவித்து, அந்த நிறுவனங்கள் வெளியேறிவிட்டன. இதனால் இந்த திட்டம் முடங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, "விபத்துகளைக் குறைக்கவும், குற்றங்களைக் கண்டுபிடிக்கவும் உதவும் அதிநவீன தானியங்கி கேமராக்களை, முதல்கட்டமாக செங்கல்பட்டு-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொருத்த முடிவு செய்தோம்.
மொத்தமுள்ள 280 கி.மீ. தூரத்தில் 58 இடங்களில் கேமராக்கள் பொருத்தி, அவற்றை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்க முடிவு செய்திருந்தோம்.
ஆனால், இதற்கான டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், அரசு ஒதுக்கியுள்ள தொகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறி, வெளியேறிவிட்டன. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியவரும்" என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறும்போது, "குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் சாலை விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு சாலைகளிலும் இதை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதால், தமிழக அரசின் எல்காட் நிறுவனம் போன்றவை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT