Published : 26 Sep 2021 06:42 PM
Last Updated : 26 Sep 2021 06:42 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு 87 பேர் போட்டி: 31 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு  

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளில் 87 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 52 வார்டு உறுப்பினர் பதவி என 66 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 21 பேரும், 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 36 பேரும், 52 வார்டு உறுப்பினர் பதவிக்கு 117 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தலா ஒரு மனுவும், வார்டு உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 2 மனுவும் என மொத்தம் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் நிராகரிக்கப்பட்டது. 170 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

52 பேர் வாபஸ்

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் கடந்த 25-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட்டது. அதில், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 14 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 30 பேரும் என மொத்தம் 52 பேர், தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதையடுத்து 118 வேட்பு மனுக்களை, மாநில தேர்தல் ஆணையம் இறுதி செய்தது.

இதையடுத்து செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 3 பதவிகளுக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர்.

5 ஊராட்சி மன்ற தலைவர்

அதேநேரத்தில் 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரியகிளாம்பாடி, சானானந்தல், கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 5 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்கராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஆகிய 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 6 பதவிகளுக்கு 16 பேர் போட்டியிடுகின்றனர்.

26 வார்டு உறுப்பினர்

மேலும் கன்னப்பனந்தல் ஊராட்சியில் வார்டு 5 மற்றும் 6, நல்லான் பிள்ளைபெற்றாள் ஊராட்சி வார்டு 1, சு.வாளவெட்டி ஊராட்சி வார்டு 5, கொளக்கரவாடி ஊராட்சி வார்டு 6, துரிஞ்சாபுரம் ஊராட்சி வார்டு 3, கலசப்பாக்கம் ஊராட்சி வார்டு 9, கீழ்பாலூர் ஊராட்சி வார்டு 7, சின்னகோளப்பாடி ஊராட்சி வார்டு 5, பிஞ்சூர் ஊராட்சி வார்டு 3, கீழ்பாதூர் ஊராட்சி வார்டு 4, மஷார் ஊராட்சி வார்டு 3, கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சி வார்டு 9, மேல்சீசமங்கலம் ஊராட்சி வார்டு 9, கீழ்நெத்தபாக்கம் ஊராட்சி வார்டு 1 மற்றும் 5, கூழமந்தல் ஊராட்சி வார்டு 6, பெரும்பாளை ஊராட்சி வார்டு 5, மூஞ்சூர்பட்டு ஊராட்சி வார்டு 2, தென்னம்பட்டு ஊராட்சி வார்டு 1, வெள்ளக்குளம் ஊராட்சி வார்டு 1, இளங்காடு ஊராட்சி வார்டு 3, அருந்தோடு ஊராட்சி வார்டு 2 மற்றும் 3, கோதண்டபுரம் ஊராட்சி வார்டு 1, 5-புத்தூர் ஊராட்சி வார்டு 1 என 26 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் 26 வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 26 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு 87 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x