Published : 26 Sep 2021 03:31 PM
Last Updated : 26 Sep 2021 03:31 PM
"புதுச்சேரி, தமிழகம் உள்பட அனைத்து மாநிலத்திலிருந்தும் சிகிச்சைக்கு வரும் ஏழைகள் ரேஷன்கார்டை காட்டுவது கட்டாயமில்லை. அதேநேரத்தில் தானாக முன்வந்து அவர்கள் வசதிக்காக செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்" என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2,600 பேரும் பணிபுரிகின்றனர். இதுதவிர, டெக்னீஷியன்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் கரோனாவுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா குறைந்தாலும் அதை ஜிப்மர் நிர்வாகம் கருத்தில் கொள்வதில்லை.
இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் அனைத்து துறைகளுக்கும் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில், "அக்டோபர் 1 முதல் வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட ஏழை மக்கள் என்பதை நிருபிக்க பிபிஎல் (BPL) ரேஷன் கார்டை கையோடு எடுத்துவரவேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை உண்டு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளுநர் தமிழிசை ஜிப்மர் தரப்பு பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் தொடங்கி பலரும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களை நடத்தத் தொடங்கினர்.
இந்நிலையில் அனைத்துத் துறைகளுக்கும் ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் "சிகிச்சைக்கு வரும் ஏழைகள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் போது ரேஷன் கார்டை காட்ட கட்டாயப்படுத்தவேண்டியதில்லை. அதே நேரத்தில் ஏழை நோயாளிகள் தங்கள் வசதிக்காக ரேஷன்கார்டை காட்டுவதை ஊக்குவிக்கவேண்டும். இது முழுக்க அவர்களின் சுய விருப்பம்தான். பொதுவார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது வருமானம் மாதத்துக்கு ரூ. 2499க்கு கீழே இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வெளிப்புற சிகிச்சை, மருந்து தருவதில் பழைய முறை தொடரும். அவசர சிகிச்சைப் பிரிவில் மாத வருவாயை அடிப்படையாகக்கொள்ளாமல் இலவச சிகிச்சை தரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT