Published : 25 Sep 2021 05:28 PM
Last Updated : 25 Sep 2021 05:28 PM
ஆணவக்கொலை வழக்கில், கடலூர் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (செப். 25) வெளியிட்ட அறிக்கை:
"சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்த காலத்தில் சா.முருகேசன் மற்றும் டி. கண்ணகி இருவரும் ஒருவரை, ஒருவர் நேசித்து 2003 மே 5 ஆம் தேதி சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதில், சா.முருகேசன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆதிக்க சாதியினர், சாதி வெறி வன்மத்துடன் முருகேசன் - கண்ணகி தம்பதியினரை தேடிக் கண்டுபிடித்து, 2003 ஜூலை 8 ஆம் தேதி ஊருக்கு அழைத்து வந்து, அவர்களை ஊர்கூடி மயானத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, அங்கு அவர்களது கை, கால்களை கட்டி, காதுகளிலும், மூக்கிலும், வாயிலும் விஷம் ஊற்றி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் தம்பதியினர் துடிதுடித்து சாவதை பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தது மனிதம் மரணித்து விட்ட துயரமாகும்.
'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற உயர்ந்த பண்பாடு கொண்ட தமிழ் சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திய கொடுங்குற்றச் செயல் மூடி மறைக்கும் முயற்சிகள் கொலைபாதகச் செயலை விட பயங்கரமானது. இந்தப் படுகொலை சம்பவம் குறித்து புகார் பெற்ற, காவல்துறை தற்கொலையாக சித்தரிக்க முற்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சியிலும் சாதி ஆதிக்கம் செலுத்துவதை வெளிப்படுத்துகிறது.
18 ஆண்டு காலம் நீண்ட சட்டப் போராட்டத்தில் கடலூர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று (24.09.2021) வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆதிக்க சக்திகளுக்கும், சட்ட அத்துமீறலில் ஈடுபடும் விசாரணை அலுவலர்களுக்கும் கடும் எச்சரிக்கையாக அமையும்.
சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த சிபிசிஐடி விசாரணை அலுவலர்களுக்கும், பாண்டிய மன்னனின் நீதி தவறிய தீர்ப்பை கண்டித்து, மதுரை மாநகரை எரித்த காப்பியக் கண்ணகியை நினைவூட்டி, 'இனியும் தமிழ் மண்ணில் வரலாறு கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும், இங்கு ஒருபோதும் கண்ணகிகள் எரிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது' என தீர்பளித்து நீதியை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி உத்தமராசனுக்கும், இந்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து ஜனநாயக இயக்கங்களையும், சட்டப்போராட்டத்தையும் முன்னெடுத்த மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் உறுதியான தனிச் சட்டம் தேவை என்பதை தொடரும் சாதி ஆணவக் கொலைகள் வலியுறுத்துகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் ஒன்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT