Published : 25 Sep 2021 05:09 PM
Last Updated : 25 Sep 2021 05:09 PM

ஏற்ற இறக்கமாக உள்ள கரோனா; இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண்க: ஓபிஎஸ்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

ஏற்ற இறக்கமாக உள்ள கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு தமிழக அரசால் விதிக்கப்பட்டது.

இருப்பினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதால், அனைத்து சில்லறை விற்பனை கடைகள் முன்பும், கரோனா பாதிப்புக்கு முன் இருந்த கூட்டத்தை நெருங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து இருக்கிறது என்றும், சிறப்பு அங்காடிகளில் கரோனா தொற்றுக்கு முன் இருந்ததைவிட கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வெறிச்சோடி கிடந்த தெருக்கள் தற்போது அலைகடல் போல் காசியளிப்பதாகவும், வார இறுதி நாட்களில் தங்குமிடங்கள் முழுவதும் நிரம்பி விடுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக, அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொதுமக்களும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கிச் செல்கின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்.

அதே சமயத்தில், இறங்குமுகமாகவே இருந்து கொண்டிருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலம் என்பதால், பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அன்று 1,509 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், 23-09-2021 அன்றைய நிலவரப்படி, 1,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 நாட்கலில் 236 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 5.5 விழுக்காட்டுக்கும் மேல். அதேபோல், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று 20 ஆக இருந்த உயிரிழப்பு 23-09-2021 அன்று 27 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு அச்சப்படும் அளவுக்கு அதிகம் இல்லையென்றாலும், இந்த உயர்வு தொடர்ந்தால், மூன்றாவது அலை ஆரம்பித்துவிடுமோ என்ற எண்ணம் மக்களிடையே தோன்றிவிடும்.

இந்த எண்ணத்தைப் போக்க வேண்டுமென்றால், அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளுக்குள்ளும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு கடுமையாக்கப்பட வேண்டும் என்பதோடு, கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள சாலைகளில் அதிக நபர்கள் கூடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு விதித்திருக்கும் கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யவும், குறிப்பிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இருப்பதை கண்காணிக்கவும், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, ஏற்ற இறக்கமாக உள்ள கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x