Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

காளவாசல் மேம்பாலத்துக்கு பிறகும் பாடம் கற்கவில்லையா?- மதுரை பாண்டி கோயில் சந்திப்பிலும் நெரிசல் தீர வாய்ப்பில்லை

பாண்டி கோயில் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை

பாண்டிகோயில் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தில் மாட்டுத்தாவணி வழியாக வாகனங்கள் செல்ல அணுகு பாலம் இல்லாததால், இப்பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் தீர வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவ்வழியாக வரும் வாகனங்களும், திருச்சியிலிருந்து நான்குவழிச் சாலை வழியாக வரும் வாகனங் களும் பாண்டி கோயில் அருகே கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இணைகின்றன. இதே இடத்தில் மதுரை நகர்ப்பகுதியிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையும் குறுக்கிடுவதால் இச்சந்திப்பில் நெரிசல் அதிகரித்து, இங்குள்ள சிக்னலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதும் வழக்கமாகி விட்டது. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாண்டி கோயில் சந்திப்பில் ரூ.50 கோடியில் புதிதாக மேம்பாலம் அமைக்க் திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் தொடங்கின. இந்த மேம்பாலப் பணி மந்தகதியில் நடப்பதால் தற்போதுவரை பாலம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஆனால், இந்த புதிய மேம்பாலம் நான்குவழிச் சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையிலும், மாட்டுத்தாவணியில் இருந்து செல்லும் வாகனங்களும், மாட்டுத்தாவணி நோக்கிவரும் வாகனங்களும் பாலத்தைப் பயன்படுத்த முடியாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுத்தாவணி மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல், ஏற்கெனவே சென்றவாறு கீழே செல்லும் சாலை வழியாகவே செல்ல முடியும். இதனால் மீண்டும் பாண்டிகோயில் சிக்னலில் வாகனங்கள் காத்திருப்பதும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் தொடரும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறியதாவது: பாண்டி கோயில் அருகே சுற்றுச்சாலையில் சரியான திட்டமிடலின்றி தற்போது கட்டப்பட்டுவரும் இந்த மேம்பாலத்தால் இச்சந்திப்பில் நெரிசல் குறையப் போவதில்லை. திருச்சி-தென் மாவட்டங்கள் இடையே நான்கு வழிச்சாலையில் செல்வோருக்கு மட்டுமே பயன்படும். இந்தப் பாலத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்வதற்கு இணைப்பு பாலம் கட்டப்படாததால் அங்கு செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் பாண்டிகோவில் சந்திப்புப் பகுதியில் நின்றுதான் செல்ல வேண்டி இருக்கும். அதற்காக சிக்னல் அமைத்து கண்காணிப்புப் பணியை போலீஸார் மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே காளவாசலில் சரியான திட்டமிடலின்றி ஒருவழிப்பாதையில் மட்டும் மேம்பாலம் கட்டியதால், எவ்வாறு இன்னமும் காளவாசல் சிக்னலில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனவோ, அதேநிலைதான் இங்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தீர்வு என்ன?

எனவே உள்ளூர் அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இதில் உரிய கவனம் செலுத்தி, இப்புதிய மேம்பாலத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். அல்லது ஐ.டி.பூங்கா அருகிலிருந்து மாட்டுத்தாவணி சுற்றுச்சாலையையும், திருச்சி நான்கு வழிச் சாலையையும் இணைக்கும் வகையில் ஒரு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு இணைப்பு பாலமோ, சாலையோ அமைக்கப்படும்பட்சத்தில் சிவகங்கை சாலை சந்திப்பில் மட்டுமல்லாமல் விழாக் காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பாண்டி கோயில் முன்பு ஏற்படும் நெரிச லுக்கும் தீர்வு காணலாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x