Published : 24 Sep 2021 09:33 PM
Last Updated : 24 Sep 2021 09:33 PM
முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் பணம் கொடுத்து படிவம் ஏதும் வாங்கி ஏமாற வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
2. இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும், அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக்கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
3. முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் (தபால்/இணையதளம் (www.cmcell.tn.gov.in) /முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.
ஆகையினால், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்ட படிவத்தில்தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கரானா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து, இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT